கோவை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்று சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் வரவேற்பதாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ ஓட்டுநர்களின் முக்கிய கோரிக்கையான மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் வரவேற்பதாக சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வந்தததன் அடிப்படையில் தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
குறைந்தபட்சமாக ஒன்றரை கிலோமீட்டருக்கு ரூ.60 கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால், எங்கள் கோரிக்கையைவிடக் குறைவான கட்டணமே அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
தீபாவளிக்கு முன்பாக மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், அதை வரவேற்கிறோம்.
இதற்கு முன்பு இருந்த இரண்டு ஆட்சியிலும் மிட்டர் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளதற்கு இந்த அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டனர்.
மேலும், ஆட்டோக்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். வெற்றி பயணத் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அவர்கள் முந்தைய அரசைப் போல குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் அத்திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால் பாதிப்பு குறைந்திருக்கும் என்றனர்.
ஒன்றரை கிலோமீட்டருக்கு ரூ.60 என்ற எங்களது கோரிக்கை பொதுமக்களுக்குப் பெரிய சுமையாக இருக்காது என்றும் தெரிவித்தனர்.
தனியார் இருசக்கர வாகன டாக்ஸிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவற்றை அரசு விதிகளுக்கு உட்பட்டு முறைப்படுத்த வேண்டும் என்றும் இருசக்கர வாகன டாக்ஸிகளை மஞ்சள் நிறப் பதிவு எண்ணுக்கு (Yellow Board) மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் என கூறிய அவர்கள் அனைத்து தொழில்களிலும் இருப்பவர்கள் சிலர் பைக் டாக்ஸியை சைடு பிஸினசாக ஓட்டுவதால் இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர்.
தனியார் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கும் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, இதுபோன்ற சம்பவங்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடையே நிலவும் கடும் அதிருப்தியின் வெளிப்பாடு எனத் சுட்டிக்காட்டிய அவர்கள் பைக் டாக்ஸிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.






