கோவை: பாரம்பரிய கலைகளுக்கான போட்டிக்கு கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து, கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை மண்டல அளவிலான ஓவிய மற்றும் சிற்பக் கலைக் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மண்டலக் கலைப் பண்பாட்டு மையத்தின் கீழ் செயல்படும் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தங்களது படைப்புகளை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் பாரம்பரிய ஓவியங்கள், நவீன ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவிய மற்றும் சிற்பப் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.5,000, இரண்டாம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.3,000, மூன்றாம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.
பங்கேற்க விரும்பும் கலைஞர்கள் தங்களது தன்விவரக் குறிப்புகளுடன் படைப்புகளுடன் கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 0422-2610290, 7358628242 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.






