கோவை: SIR விவகாரத்தை கண்டித்து கோவையில் தேர்தல் தொடர்பான கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தக் கட்சியினர்.
SIR விவகாரத்தைக் கண்டித்து வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனைக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்தும், இச்சூழலில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது பொருத்தமற்றது எனக் கூறியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM), இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், SIR நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருதலைப்பட்சமாகவும், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
SIR நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது தற்போது பொருத்தமற்றது என்பதால் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.






