தோஷம் என்று கூறி பெண்களிடம் அத்துமீறல்: ஜோதிடரிடம் கோவை போலீஸ் விசாரணை!

கோவை: ஜாதக தோஷத்தை போக்குவதாக கூறி, ஐ.டி நிறுவன பெண் இன்ஜினீயர் உட்பட பல பெண்களுக்கு திருமண ஆசை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட யூடியூப் ஜோதிடர் ஒருவரை பிடித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சென்னையை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தில் பெற்றோருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், மன அமைதி தேடி தனது தோழியின் அறிவுரையின் பேரில் யூடியூப்பில் ஜோதிடப் பலன்களை பார்த்து வந்தார்.

Advertisement


அப்போது, கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ‘பிரபல’ ஜோதிடர் கார்த்திகேயன் அறிமுகமாகியுள்ளார். ஆன்லைன் மூலம் வலையை வீசிய அந்த ஜோதிடர், பெண்ணின் தந்தையின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார். அதை நம்பிய பெண்ணின் வீட்டிற்கே நேரடியாக வந்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார்.

இத்துடன் நிறுத்தாமல், பெண்ணின் ஜாதகத்தில் இருக்கும் திருமண தோஷத்தை போக்க வேண்டும் என்றால் தனியாகபரிகாரப் பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, அந்த பெண்ணை மட்டும் தனியாக புதுச்சேரிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து, திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அத்துமீற முயன்றுள்ளார். ஆனால், உஷாரான அப்பெண் அவரது பேச்சை மறுத்துவிட்டு உடனடியாக சென்னைக்கு திரும்பியுள்ளார்.

Advertisement


ஆனாலும் விடாமல் துரத்திய அந்த ஜோதிடர் கார்த்திகேயன், தொடர்ந்து அந்த பெண்ணுடன் போனில் பேசி வந்துள்ளார். ஒருகட்டத்தில், பரிகார பூஜையின் தொடர்ச்சி என கூறி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து மீண்டும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசிய ஜோதிடர், பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, காரியம் முடிந்ததும் அந்த பெண்ணின் போன் அழைப்புகளை ஜோதிடர் முற்றிலுமாக தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், அந்த ஜோதிடர் குறித்து ரகசியமாக விசாரித்தபோது அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. இதே பாணியில் திருப்பூரை சேர்ந்த மற்றொரு பெண்ணையும் அந்த ஜோதிடர் ஏமாற்றி சீரழித்தது தெரியவந்தது.

Advertisement


பாதிக்கப்பட்ட சென்னை பெண் இதுகுறித்து சென்னை மேற்கு தாம்பரம் இணை கமிஷனரிடமும், திருப்பூரை சேர்ந்த பெண் கோவை ரூரல் எஸ்.பி. அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் அடுக்கடுக்கான புகார் மனுக்களை அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், மேலும் பல பெண்களை அவர் இதேபோல ஜாதகம், பரிகாரம் என்ற பெயரில் ஏமாற்றியிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...