கோவையில் 2 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை… !

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வடவள்ளியில் ஜி பே மூலம் ரூ.6 லட்சம் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச வசூல் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

Advertisement

பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குப் பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், துடியலூர், பிளிச்சி, வீரபாண்டி, கூடலூர், குருடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். பத்திரப்பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்று மற்றும் பத்திர நகல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இங்கு நடைபெறுகின்றன.

இந்த அலுவலகத்தில் லஞ்சப் பணம் கொடுக்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர்கள் பிரபுதாஸ், எழிலரசி தலைமையிலான சுமார் எட்டு பேர் கொண்ட போலீஸ் குழுவினர் பிற்பகல் 3 மணியளவில் திடீர் சோதனையைத் தொடங்கினர்.

Advertisement

அதே நேரத்தில், வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தீபாவளி வசூல் மற்றும் முறைகேடான பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் தெரிவித்தார்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 8.30 மணியளவில் நிறைவடைந்தது. இதில், வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், ஜி பே மூலம் ரூ.6 லட்சம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இரு அலுவலகங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனையின்போது, பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தின் முன்பு லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் போலீசார் ஒட்டினர். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்பட்டால், உடனடியாக வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என்ற வாசகங்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.

ஒரே நேரத்தில் இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற இந்தச் சோதனை, பதிவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா… திராவிடர் கழகம் ஏற்பாடு!

கோவையில் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நீலாம்பூரில் புதிய திமுக அலுவலகத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...