கோவை: கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை இடர்பாடுகள், மழை மற்றும் பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பாராத வகையில் பயிர் இழப்புகள் ஏற்படும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மக்காச்சோளப் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,370.85 (ஒரு ஏக்கருக்கு ரூ.554.76), கொண்டைக்கடலை பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.690.39 (ஒரு ஏக்கருக்கு ரூ.279.39) காப்பீட்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சோளப் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.510.99 (ஒரு ஏக்கருக்கு ரூ.206.79) காப்பீட்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான கடைசி நாள் டிசம்பர் 16-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் (KCC) மற்றும் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள், குத்தகைதாரர்கள் உள்ளிட்ட தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல், நில ஆவணங்கள் (சிட்டா, அடங்கல் அல்லது பட்டா) மற்றும் குத்தகை ஒப்பந்தம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகள் இணையதளம் வாயிலாக [pmfby.gov.in] என்ற தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்திலும், அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC), இ-சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் காப்பீடு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





