கோவை: கோவையில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
இதில் ரத்தினம் குளோபஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த 60 பணியாளர்கள் பங்கேற்றனர்.
பேரணியின்போது, மழைநீரை சேகரிப்பதன் அவசியம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மழைநீர் சேகரிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.





