கோவை: கோவையில் 10 பேர் இணைந்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் தொடங்க ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 10 நபர்களைக் கொண்ட குழுவாக இணைந்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் (Ready Made Garments Unit) தொடங்க தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
இதன்படி, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்காக அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் (MSME) கீழ் பதிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைந்திருக்க வேண்டும். குழுவில் உள்ள அனைவரும் தையல் தொழில் தெரிந்தவர்களாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்விச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.





