கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாகவும், இறை வழிபாட்டிற்கு உகந்த மாநிலமாகவும் இருப்பது கார்த்திகை தான். இந்த மாதம் பிறந்தாலே, திரும்பும் பக்கம் எல்லாம் சரண கோஷமாகத்தான் இருக்கும். கார்த்திகை மாதம் தான் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாகும்.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் துளசி, ருத்ராட்சை மாலை அணிந்து, ஐயப்பனை வேண்டி, 48 நாட்கள் விரதத்தை துவங்குவார்கள்.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்த மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கானோர் சபரிமலைக்கு வருவார்கள். குறிப்பாக, கேரளாவின் அண்டை மாவட்டமான கோவையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்வார்கள். நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் இந்த மாதம் முழுவதும் மிகவும் விசேஷமாக இருக்கும். மாலை அணிபவர்கள், கட்டு கட்டி கோவிலுக்கு செல்பவர்கள் என தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து விரதமிருப்பதற்கு பின்னால், ஆன்மிக காரணங்களையும் கடந்து, பல அறிவியல் பூர்வமான காரணங்களும் அமைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது காணலாம்.
ஆன்மீக காரணங்கள்
சபரிமலை யாத்திரையின் விரதத்தின் மிகவும் அடிப்படையான விதி 41 நாட்கள் பிரம்மச்சரிய விரதமாகும். கார்த்திகை மாதம் 1ம் தேதி (இன்று) மாலை அணிந்து விரதத்தை தொடங்கினால், மார்கழி மாதம் நடக்கும் மண்டல பூஜை வரை சரியாக 41 நாட்கள் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பார்கள். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து பச்சை தண்ணீரில் நீராடி, ஒருவேளை விரதமிருந்து, வெறும் காலில் நடந்து, 41 நாட்கள் இதனை கடைபிடிப்பார்கள். இதன்மூலம், சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய மனதளவிலும், உடல் அளவிலும் ஐயப்ப பக்தர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள்.

ஆன்மீக ரீதியாக இந்த மாதம், (கார்த்திகை தீபம்) சிவலபெருமானுக்கும், (துளசி வழிபாடு) விஷ்ணுவிற்கும் மிகவும் உகந்ததாகும். ஹரியும் (விஷ்ணு), ஹரனும் (சிவன்) இணைந்த அவதாரமே ஐயப்பன் சுவாமியாகும். இருவருக்கும் உகந்த இந்த மாதத்தின் முதல் நாளில் விரதத்தை இருப்பது ஐயப்பனின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும் என்று பக்தர்களின் தீராத நம்பிக்கையாகும்.
அறிவியல் காரணங்கள்
கார்த்திகை, மார்கழி மாதங்கள் மிகவும் குளிர் காலமாகும். இந்தக் காலகட்டத்தில் நமக்கு கபம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் எழும். இதனை சமாளிக்கவே நம் முன்னோர்கள் இந்த அறிவியல் ரீதியிலான விரத முறையை கையாண்டனர். கழுத்தில் அணியும் துளசி, ருத்ராட்சை மாலைகள் உடலின் வெப்பத்தை சமநிலையில் வைப்பதற்கு, இயற்கையான மருத்துவ குணம் கொண்டவையாகும.
அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடுதல், விரைவில் செரிமானமாகும் சைவ உணவுகளை சாப்பிடுதல், வெறும் காலில் நடப்பது (அக்குபிரஷர் பலன்) போன்றவையால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இந்த காலகட்டத்தில் பல்வேறு நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய காலங்களில் இதுபோன்ற வசதிகள் ஏதுமில்லை.

அடர்ந்த வனப்பகுதி வழியாக பாதயாத்திரையாக சபரிமலை செல்ல வேண்டும். மழைக்காலம் முடிந்து பனிக்காலம் திரும்புவதால், வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிப்பதோடு, நீர்நிலைகளும் நிரம்பி இருக்கும். இது வனப்பகுதிகளில் பாத்யாத்திரை செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
அறிவியல் காரணங்களாக இருந்தாலும், ஆன்மீகமே முதன்மையானது. இதன் காரணமாகவே, 41 நாட்கள் மனதையும், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்து, புலன்களை அடக்கி, இறைவனோடு ஒன்றிணையவே, இந்த சபரிமலை ஆன்மீகப் பயணத்தை பக்தர்கள் கடைபிடிக்கின்றனர்.





