கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் டெங்கு கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 13-வது வார்டுக்கு உட்பட்ட உருமாண்டாம்பாளையம், நஞ்சேகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
குடியிருப்புப் பகுதிகளில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், டிரம்கள் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன.
இதுதவிர, வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த இரு பகுதிகளிலும் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் 60-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணிகளில் சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ், மேற்பார்வையாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


