கோவை: ஆடிப்பெருக்கு இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதுபற்றிய சிறு தொகுப்பை தற்போது காணலாம்.
ஆடிப்பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாளில் தமிழ் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பாரம்பரியத் திருவிழா ஆகும். ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழையினால், காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுவது வழக்கம். குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு வளம் சேர்க்கும் இந்தப் பருவ மழைக்கும், ஆறுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
ஆடிப் பட்டம் தேடி விதை என்பது நம் முன்னோர்களின் பழமொழியாகும். விவசாயப் பணிகளைத் தொடங்குவதற்கும், நெல் போன்ற பயிர்களை விதைப்பதற்கும் இந்த ஆடி 18 மிக உகந்த நாளாகும்.
மக்கள் காவிரி மற்றும் பிற நதிக்கரைகளில் ஒன்றுகூடி, பூக்கள், மஞ்சள், காதோலை கருகமணி, பழங்கள் மற்றும் காப்பரிசி படையலிட்டு நதியை வழிபடுவர். அதுமட்டுமில்லாமல், திருமணமான பெண்கள் தங்கள் தீர்க்க சுமங்கலி வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்து, பழைய தாலிக் கயிற்றை மாற்றிப் புதிய மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வர்.
மேலும், திருமணமாகாத பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டி நதிக்கரையில் மஞ்சள் கயிற்றால் காப்பு கட்டிக் கொள்வர்.இது பெரும்பாலும், மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்படும்.
அதேவேளையில், மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தும் தினமாகவும் இந்த ஆடிப்பெருக்கு இருந்து வருகிறது.
தற்போது, போதிய மழை இல்லாத காரணத்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், ஆறுகளுக்கு நன்றி தெரிவிக்க படித்துறைகளுக்கு சென்ற மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், புதிதாக திருமணமான தம்பதிகள், தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட முடியாமல் தவித்தனர். வேறு வழியில்லாமல் தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த நீரை ஊற்றி சடங்கு சம்பிரதாயங்களை செய்து முடித்தனர்.
கோவை பேரூரில் ஆண்டு தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். இந்தாண்டும் படித்துறையில் மக்கள் திரண்டனர். ஆனால், நொய்யல் ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதால், திதி கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வேறு வழியில்லாமல், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை தண்ணீரில், திதி கொடுத்து வழிபாடுகளை முடித்துச் சென்றனர்.
தாலி சரடு
இந்த ஆடிப்பெருக்கில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுவது பெண்கள் தாலி மாற்றும் நிகழ்வு தான். இன்று காலையிலும், மாலையிலும் நல்ல நேரம் பார்த்து தாலி சரடை சுமங்கலி பெண்கள் மாற்றியிருப்பார்கள். அதன் பலன் பலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலும் போயிருக்கலாம். உண்மையில், ஆடிப்பெருக்கில் தாலி சரடு மாற்றினால், மாங்கல்ய பலம் அதிகரிப்பதோடு, கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மேலும், கணவன் – மனைவி இடையேயான உறவு சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ராசிகளும், தாலி சரடு மாற்ற ஏற்ற நல்ல நேரம்
மேஷம்- மாலை 4 மணி – 5.30 மணி
ரிஷபம் – மாலை 5.30 – 6.30
மிதுனம் – மாலை 5 மணி முதல் 6.05 வரை
கடகம் – மாலை 6 மணி முதல் 7 மணி வரை
சிம்மம் – மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
கன்னி – 4.45 மணி முதல் 5.30 மணி வரை
துலாம் – இரவு 8 மணி முதல் 9 மணி வரை
விருச்சிகம் – மாலை 5 மணி முதல் 6 மானி வரை
தனுசு – மாலை 4.10 மணி கிதல் 5.15 மணி வரை
மகரம் – 6 மணி முதல் 7 மானி வரை
கும்பம் – 5.15 மணி முதல் 6 மணி வரை
மீனம் – 6 மணி முதல்7 மணி வரை
வளம் பெருகும்
ஆடிப்பெருக்கு நாளில் பொருட்கள் வாங்கினால், வளம் பெருகும் என்பது மக்களிடையே பரவலாக இருக்கும் நம்பிக்கையாகும். எனவே இந்த நாளில், நகை, வெள்ளி மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
ஜோதிடம் சொல்வது என்ன?
பொதுவாக ஆடி மாதம் கடக ராசிக்கு உகந்த மாதமாகும். இந்த ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய 3 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த மாதத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் இருந்து ஆயில்யம் நட்சத்திரத்திற்கு இடம்பெயர்கிறார். ஜோதிட ரீதியாக இந்த மாற்றம் ஒரு தனித்துவமான ஆற்றலை வழங்கும் என்பதால், இந்த ஆடி மாதத்தை ஆன்மீகத்திற்கு உகந்த மாதமாக நாம் முன்னோர்களுக்கு கடைபிடிக்கத் தொடங்கினர். அதனையே, நாமும் கடைபிடித்து வருகிறோம்.
இந்த நாளில் நீங்கள் வழிபாடு நடத்தும் முறையில் ஏதேனும் புதுமையான செயல்பாடுகள் இருந்தால், அதனை கமெண்டில் பதிவிடுங்கள்.





