கோவை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததுடன், தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக ‘சிங்கப்பெண்’ 1091 உதவி எண்ணில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததாக, ‘சிங்கப்பெண்’ உதவி எண் 1091 மூலம் 19 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அவசர உதவி எண் 1091-ஐ தொடர்புகொண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் உதவி கோரினார். தகவல் கிடைத்ததும், ‘சிங்கப்பெண்’ பிரிவு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தனக்கு 17 வயது இருந்தபோது 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இளம்பெண் தெரிவித்தார்.
மேலும், அந்த காலத்தில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், இணையத்தில் பரப்புவதாகவும் மிரட்டி வருவதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், இளம்பெண் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, ‘சிங்கப்பெண்’ பிரிவு காவல்துறையினரின் உதவியுடன், இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் பிற சட்டரீதியான அம்சங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





