அன்று MGR… இன்று விஜய்… அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஜனநாயகன் செய்த சம்பவம்

கடைசி படம்

தற்பாதைய தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவான படம் ஜனநாயகன். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், ரேவதி, கவுதம் வாசுதேவ் மேனன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்தப் படம், பொங்கல் பண்டிகை ரீலீஸாக இருக்கும் என்று படக்குழு அறிவித்திருந்தது. விஜய்யின் அரசியல் வருகையால், அவருக்கு இது கடைசி படம் என்று அறிவித்தது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. ஆனால், சென்சார் பிரச்சினையால் இந்த எதிர்பார்ப்பு எல்லாம் சுக்கு நூறாகிப் போனது.

பட வெளியீடு நாளுக்கு நாள் தள்ளிப்போக, அதற்குள் தேர்தல் நடந்து முடிந்து விஜய் முதல்வரே ஆகிவிட்டார். ஆட்சிப் பொறுப்பு கைக்கு வந்து விட்டதால், படத்தின் ரிலீஸூக்கு எந்த சிக்கலும் வரவில்லை. ஏ சான்றிதழ் கிடைத்து, படம் திரையில் வெளியாக தயாரானது. முதல்வராக விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற 75வது நாளில் ‘ஜனநாயகன்’ இன்று வெளியானது.

Advertisement

திருவிழா

தமிழகத்தில் ஆயிரம் திரையரங்குகளிலும், இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ஜனநாயகன் படம் வெளியானது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், படம் காலை 9 மணிக்கே வெளியானது. ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் சிறப்பு காட்சி அதிகாலை 6 மணிக்கே வெளியிடப்பட்டது. அந்தந்த மாநில ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்களும், மாநில எல்லைகளில் உள்ள தியேட்டர்களில் ஜனநாயகனை கொண்டாடினர்.

Advertisement

தியேட்டர்களின் வெளியே டிஜே கச்சேரி, பேனர்கள், பட்டாசுகள், மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். தியேட்டர்களுக்கு உள்ளேயும், வெளியேயும் திருவிழா போல களைகட்டியது. சில இடங்களில் முதல்வர் விஜய் போல வேடமணிந்து வந்து ரசிகர்களை கவர்ந்தனர்.

அமைச்சர்கள் கண்ணீர்

படம் வெளியானதும் முதல் காட்சியை நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், துஷாரா விஜயன், மமிதா பைஜூ உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். அதேபோல, சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், முகமது பர்வேஸ், விக்னேஷ், சம்பத்குமார், ஜெகதீஸ்வரி மற்றும் தவெக எம்எல்ஏக்களும் ரசிகர்களுடன் ரசிகர்களாக படத்தை பார்த்து மகிழ்ந்தனர். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போதே, விஜய்யின் கடைசி படம் என்பதால், அமைச்சர்கள் முகமது பர்வேஸ், விக்னேஷ் ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். அதேபோல, கரூரில் முதல் காட்சியைப் பார்த்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனும் டைட்டில் கார்டு வந்ததும் தேம்பி தேம்பி அழுதார்.

கிண்டல்

முதல்வர் விஜயின் படத்தை பார்த்ததும் அமைச்சர் முகமது பர்வேஸ் அழுததை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் இணைத்து வைத்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு முன்பாக, சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் எம்ஜிஆரின் ‘இதயக்கனி’ படத்தை பார்த்து போது, இபிஎஸ் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இந்த இரு நிகழ்வுகளையும் இணைத்து வைத்து சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டு வருகிறது.

எம்ஜிஆரும்… விஜயும்…

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 1977ம் ஆண்டு முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற இரு மாதங்களுக்குப் பிறகு, ‘மீனவ நண்பன்’ படமும், 6 மாதங்களுக்கு பிறகு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படமும் வெளியானது. அப்போதைய பரபரப்பான தேர்தல் சூழலால் இந்தப் படங்கள் வெளியாவதில் தாமதமானது. அதேபோலத் தான், விஜய் முதல்வரான இரு மாதங்களுக்குப் பிறகு, நீண்ட போராட்டங்களைக் கடந்த ‘ஜனநாயகன்’ படம் இன்று வெளியாகியுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஜிஆரைத் தொடர்ந்து, ஒரு முதல்வர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது, அவரது படம் வெளியாகியுள்ளது.

விமர்சனம்

மதுரை சிறைக்கைதியாக இருக்கும் தளபதி வெற்றிக்கொண்டானின் (விஜய்) இன்ட்ரடொக்ஷன் காட்சியோடு படம் துவங்குகிறது. தனது தாயை பார்க்க உதவும் சிறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் (கவுதம் மேனன்) சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அதன்பிறகு, அவரது மகள் விஜியை (மமிதா பைஜூ) நினைத்தபடி ராணுவ அதிகாரியாக ஆக்குவதே படத்தின் கதையாகும். இதற்கு நடுவே, வில்லன் (பாபி தியோல்) இடம் இருந்து விஜியை காப்பாற்றுவதே தளபதி வெற்றிக்கொண்டானின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை ரசிக்கச் செய்துள்ளது.

வழக்கம் போல பூஜா ஹெக்டே இந்தப் படத்திலும் துணைக் கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ், ரேவதி ஆகியோர் படத்தின் காட்சிகளை நிரப்பும் கதாபாத்திரமாக மட்டுமே உள்ளது. மமிதா பைஜூக்கு கனமாக கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் திறம்பட ரசிக்கும்படி செய்து முடித்துள்ளார்.

கைகொடுக்கல

ஆரம்பத்தில் பாலையாவின் தெலுங்கு படமான பகவத் கேசரியின் ரீமேக் என்ற தகவல் கசிந்து வந்தாலும், இதற்கு படக்குழுவினர் மவுனம் காத்து வந்தனர். பிறகு டிரெய்லர் வெளியான போது, அதனை ரசிகர்கள் உறுதி படுத்திக் கொண்டனர். ஆனால், பகவத் கேசரி படத்தின் மையக்கதை மட்டுமே ரீமேக் செய்துள்ளதாகவும், படம் முழுக்க முழுக்க புதுமையானது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்திருந்தனர்.

ஆனால், தெலுங்கு படத்தின் 100 சதவீத மசாலா வாசனை அப்படியே ஜனநாயகனில் இருக்கிறது என்றே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, அந்த மொழிப் படங்கள் (நம்ப முடியாத காட்சிகள்) உருவாக்கப்படும். இந்தப் படத்திலும் அதுபோன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இதை உணர முடியும். இருப்பினும், நடிகர் விஜய்யின் கடைசிப் படம் மற்றும் அனிருத்தின் இசையும் ஜனநாயகனுக்கு உயிர்கொடுத்துள்ளது.

சென்டிமென்ட்

ஜனநாயகன் டைட்டில் கார்டே தவெகவினரை வைப் செய்ய வைத்துள்ளது. சட்டசபையில் திமுகவினரை அலறவிட்ட விஜய்யின் சைகையுடன் முதல்வர் தளபதி ஜோசப் விஜய் என்ற பெயர் இடம்பெற்றிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஒரு காட்சியில் வில்லனின் வீட்டுக்கு செல்லும் விஜய், அங்கு மாட்டப்பட்டிருக்கும் எம்ஜிஆர் போட்டோவை கடந்து செல்வார். அப்போது, ‘தங்கமே தளபதி’ எனக் கூறி விஜய்க்கு சாட்டையை வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது சற்று கிரிஞ்சாக இருக்கும். இருப்பினும், அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல மற்றொரு காட்சியில் பிரகாஷ் ராஜை சாட்டையால் அடிக்கும் போது TVK சட்டம் என்று விஜய் சொல்லியிருப்பார். அது தமிழக வெற்றிக் கழகம் அல்ல. தளபதி வெற்றிக்கொண்டான். படத்திற்கு சம்பந்தமே இல்லாத அரசியல் வசனங்கள் இருந்தாலும், அவை அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

முதல் நாள் வசூல்

இதுவரையில் தமிழ் சினிமாவில் படம் வெளியான முதல் நாளில் அதிக வசூலை ஈட்டியது விஜய்யின் பீஸ்ட் படம் தான். 35 கோடி ரூபாயை ஈட்டியது. 2வது இடத்தில் லியோ (ரூ.34 கோடி), 3வது இடத்தில் குட் பேட் அக்லி (ரூ.31 கோடி), 4வது இடத்தில் கோட் (ரூ.30.8 கோடி), 5வது இடத்தில் கூலி (ரூ.30 கோடி) இடம்பெற்றுள்ளன. டாப் 5 இடங்களில் விஜய் நடித்த 3 படங்கள் இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் ஜனநாயகனும் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

வரவேற்பை பெறும்

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், திரையில் தவிர்க்க முடியாத சிறந்த என்டர்டெயினராக வலம் வந்தார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளத்தை திரட்டியுள்ளார். தற்போது, அரசியலில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ள விஜய்க்கு, இந்தப் படம் சிறந்த பிரியாவிடையைக் கொடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...