கோவை: சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்கவில்லை என்று கூறி கோவை மாநகரட்சி ஆணையரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணிநியமனங்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி கமிஷனர் தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து சமூக நீதி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சமூக நீதி அமைப்பின் தொழிற்சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
“கோவை மாநகராட்சியில் சட்டவிரோதமாக அமர்த்தப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி ரத்து செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சி கமிஷனர் அவர்களை பணிநீக்கம் செய்ய மறுத்து, தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது மாநகராட்சி கமிஷனரின் கடமையாகும். ஆனால், புகார் அளித்தவர்களையே வேலைவிட்டு தூக்கிவிடுவேன் என மிரட்டும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது.
Also Read: கோவையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்; திருநங்கைகள் 4 பேர் கைது
லஞ்சம், ஊழல் தொடர்பான ரகசியங்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தினாலேயே அதிகாரிகள் அவர்களை பணிநீக்கம் செய்யாமல் பாதுகாத்து வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.





