கோவை: மூன்றாவது நாளாக தொடரும் அகிலன் தற்கொலை வழக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
கோவையில் பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை உடன்படாததால் உறவினர்கள், முற்போக்கு அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் அகிலன் (16) நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி ஆசிரியர்கள் அகிலனின் சாதி குறித்து சக மாணவர்கள் முன்னிலையில் பேசியதாகவும், இதனால் மற்ற மாணவர்கள் அகிலனுடன் பேசுவதைத் தவிர்த்து கேலி செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பள்ளி ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் சக மாணவர்கள் இரண்டு பேர் என நான்கு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருந்த போதிலும், ஆசிரியர்கள் கைது செய்யப்படாததால், தொடர்ந்து மூன்று நாட்களாக அகிலனின் உடலைப் பெறாமல் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு தினங்கள் பீளமேடு காவல் நிலையத்தில் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உறவினர்கள் மற்றும் இயக்கங்கள் என நூற்றுக்கணக்கானோர் கண்டன முழக்கங்களை எழுப்பிய படி வருகை புரிந்தனர்.
மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, முன்னாள் மாணவர் ஒருவர் ஆட்சியர் முன்னிலையில், இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சாதிய பாகுபாட்டுடன் பேசுவது குறித்துத் தெரிவித்தார்.
இருப்பினும், இவ்வழக்கு தொடர்பாக இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், ஆசிரியர்களைக் கைது செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறினர்.
இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் இதனைக் கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப்பினர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமாரை கைது செய்யும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் எனக் கூறி அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய முற்போக்கு இயக்கத்தினரும் பெற்றோரும் உடனடியாக இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் கைது செய்யப்படாத வரை அகிலன் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் இருவரை கைது செய்யும் காவல்துறையினர் ஏன் ஆசிரியர்களை கைது செய்யவில்லை எதற்காக மறுக்கிறார்கள் என்ற கேள்வியை முற்போக்கு இயக்கத்தினர் முன்வைத்துள்ளனர்.






