கோவை: விமான நிலையத்திற்கு மாற்று இடம் பார்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் GRD தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் இந்த அரசு வந்ததற்கு காரணமே மாணவர்களாக நீங்கள்தான் இன்று அரசியலில் என்னென்ன நடக்கிறது என்று நீங்களே பார்க்கிறீர்கள் என்று தெரிவித்தார். Corruption Free அரசாக இருக்க நினைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
லஞ்சம் ஊழல் இல்லாத நிலையை இந்த அரசு உருவாக்கி இருப்பதாக கூறினார். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர் கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் அதனை மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார். மேலும் 100% அரசு உங்களுடன் இருக்கும் என்று தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் குறித்து கல்லூரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு கண்டிப்பாக கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ தேவை, கூடிய விரைவில் அதற்குரிய அறிவிப்பு வரும் என்று பதிலளித்தார். மின்சாரத் துறையில் கடந்த ஆட்சியில் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்படாமல் இருந்ததாகவும் தற்பொழுது அதில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் Renewable Energyக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட இருப்பதாகவும் கூறினார்.
தற்பொழுது ஆட்டோமொபைல் செக்டர்கள் கூட குறைந்துவிட்டதாக கூறிய அவர் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்பனை இந்த அளவிற்கு இல்லை என்று கூறிய அவர் தற்பொழுது பள்ளி மாணவர்கள் கையில் கூட அவை எளிதில்கிடைத்து விடுவதாகவும் ஆட்சியாளர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரிந்தும் கடந்த ஆட்சியாளர்கள் அதனை தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சட்டத்துறையை பொறுத்தவரை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றங்களுக்கும் தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதுவே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என சுட்டிக்காட்டினார்.
சோலார் மற்றும் காற்றாலைகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதனை சீர் செய்ய இருப்பதாகவும் கூறிய அவர் தற்போது மின்சாரத்தை வாங்குவதில் நாம் அதிக தொகையை செலவிடுவதாகவும் அதனை சரி செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி நம்மிடம் தற்போது இருப்பதெல்லாம் 20 ஆண்டுகள் பழமையான இயந்திரங்கள் அதனை மாற்றினாலே 9% க்கும் கீழ் Energy Wastage கட்ட முடியும் என்று தெரிவித்தார்.
போதை இல்லா மாநிலம் பாதுகாப்பு உள்கட்டமைப்பை இவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவதாகவும் இந்த அரசு உங்களுக்காக மட்டுமே உழைக்கிறது என்றும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுக்காக தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார் மேலும் அரசு திட்டங்கள் எளிமையாக கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
சைபர் செக்யூரிட்டியில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்று கூறிய அவர் ஏ ஐ தொழில்நுட்பமும் நன்கு வளர்ச்சி பெறும் அதே சமயம் அந்த ஏ ஐ தொழில்நுட்பம் பெரும் கவலையையும் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார். நாம் அதிகமாக அதனை நம்பி இருக்கும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறிய அவர் அதை மட்டுமே நம்பி இருப்பது ஆபத்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு அதனை கட்டுப்படுத்தும் தேவையும் ஏற்படும் என்று கூறினார்.
மேலும் பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் சில அதிகாரிகளுடன் அது குறித்து பேசிய பொழுது ரன்வே அங்கு ஏற்படுத்த முடியாது என்று கூறியதாகவும் அதில் 800 முதல் 900 ஏக்கர் நிலங்களில் நீர் நிலைகள் அதிகம் இருந்தது முக்கிய காரணம் அப்படி இருக்கும் பொழுது மாற்று இடம் எடுப்பதற்காக பேசி வருவதாக தெரிவித்தார்.
நான் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் தான் ஆனால் அனைத்து அரசியல் விவகாரங்கள் குறித்து தேடி படிப்பேன் என்றார்
இந்த முறை பெண்களின் பங்களிப்பு நீதிமன்றங்களில் அதிகம் இருக்கும் என்றும் யார் யாரெல்லாம் தகுதியானவர்களோ அவர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.





