கோவை: மதுக்கரை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் 100 கிலோ நெய்யுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பக்தர்களால் ‘கொங்கு திருவண்ணாமலை’ என அழைக்கப்படும் இக்கோவிலில் நடைபெற்ற தீபத் திருவிழாவில், கைலாய வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெய், மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில் ஊற்றப்பட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இங்கும் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைக் காண கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, கேரள மாநில எல்லைப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மலை ஏறிச் சென்ற பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து மகா தீபத்தை வழிபட்டனர். மலை ஏற முடியாத பக்தர்கள் மலையடிவாரத்தில் நின்றபடியே மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
மகா தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் ‘அரோகரா’ என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


