கோவை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோவை மருதமலை முருகன் கோயிலில் 20 அடி உயரத் தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 20 அடி உயரத் தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அரோகரா! அரோகரா!’ எனக் கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
முன்னதாக, கோயில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து, தங்கக் கவச அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர் ஆதிமூலஸ்தானம், சிவன் சன்னதி மற்றும் அம்மன் சன்னதிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, கொடிக்கம்பம் அருகே உள்ள 20 அடி உயரத் தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
video
சொக்கப்பனை எரிக்கப்பட்ட பின்னர், அதன் சாம்பலைப் பக்தர்கள் நெற்றியில் திலகமாக இட்டு வழிபட்டனர். திருவிழாவையொட்டி, கோயிலின் ராஜகோபுரமும் வளாகமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
நிகழ்ச்சியில் கோயில் தக்கார், துணை ஆணையர் விமலா, கோயில் பணியாளர்கள் மற்றும் கோவை மாநகரக் காவல்துறையினர் கலந்து கொண்டனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


