கோவை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் சாலை மார்க்கமாக தாராபுரம் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் அவிநாசி சாலை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விமான நிலைய சாலையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று வரவேற்பு அளிக்கும் வகையில் தடுப்புக் கம்பிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, அவிநாசி சாலை தொடங்கி விமான நிலையம் வரையிலும் வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். விமான நிலைய நுழைவுப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து காரில் அமர்ந்தபடி வெளியே வந்த முதலமைச்சர் விஜய், சாலையோரம் திரண்டிருந்தவர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை வரவேற்று கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய், கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி புறப்பட்டுச் சென்றார். தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தையொட்டி அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.





