கோவை : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இரு வாலிபர்களை கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி உத்தரவின் பேரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 2.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷா என்பவரின் மகன் ஹரி ஷங்கர் ஷா (25) மற்றும் மற்றொரு வடமாநிலத்தைச் சேர்ந்த சுதாகர் கவாண்டே என்பவரின் மகன் நிகில் பிரவீன் எல்குந்த்வார் (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க ‘நிழல்’ (Nizhal) என்ற பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





