கோவை : 2026-27ம் நிதியாண்டில் கோவை மாநகராட்சியில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை ரூ.306.80 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் மூலம் மட்டும் ரூ.134.50 கோடி வசூலாகியுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 963 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.523.10 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
2026-27ம் நிதியாண்டுக்கான சொத்து வரி மற்றும் நிலுவைத் தொகை வசூல் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் மட்டும் ரூ.306.80 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில், ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் மட்டும் ரூ.138.81 கோடி வசூலாகியுள்ளது. மொபைல் ஆப் மூலம் ரூ.44 லட்சம், ஆன்லைன் வழியாக ரூ.134.50 கோடி, ECS மூலம் ரூ.3.86 கோடி, POS கார்டு மூலம் ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டும் 88,732 பேர் சொத்து வரி செலுத்தியுள்ளனர்.
மீதமுள்ள ரூ.163.13 கோடி ரொக்கம், காசோலை மற்றும் வங்கி வரைவோலை மூலமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 47,728 பேரிடமிருந்து ரூ.46.63 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.4.87 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து ரூ.17.30 கோடி தொழில் வரியும், காலியிட வரியாக ரூ.2.94 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.
Coimbatore Corporation collects Rs 306.80 crore property tax in 2026-27 fiscal year






