கோவையில் ஆரம்பித்த க்ரைம்… டெல்லி எஸ்கேப்… விமானத்தில் வந்து கொலை! 9 பேர் கும்பலின் அதிர்ச்சி பின்னணி

கோவை: கோவையில் கொள்ளையில் தொடங்கி, டெல்லியில் தலைமறைவாகி, விமானத்தில் தமிழகம் திரும்பி கொலை செய்ததாக கூறப்படும் 9 பேர் கொண்ட கும்பலை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் கல்லூரி மாணவர்களை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணம், நகை பறிப்பு… பிடிக்க வந்த போலீஸாரை மிளகாய்ப் பொடி தூவி விட்டு தப்பியோட்டம்… பின்னர் தேனியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை… போலீஸாரிடம் சிக்காமல் டெல்லிக்கு தப்பிய கும்பல், சில மாதங்களுக்குப் பிறகு விமானத்தில் தமிழகம் திரும்பி கீழடியில் கொலை செய்துவிட்டு மீண்டும் கோவைக்கே வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 9 பேர் கொண்ட கும்பலை குனியமுத்தூர் போலீஸார் தற்போது சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம். கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்தக் கும்பல் செயல்பட்டுள்ளது.

Advertisement

இரவு நேரங்களில் தனியாக செல்லும் மாணவர்களை வழிமறித்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், போலீஸார் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் போலீஸாரின் நடவடிக்கையை அறிந்த கும்பல், அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

அப்போது இந்த கும்பலை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர் , இந்த நிலையில் அவர்களது கார் போலீஸாரின் கண்காணிப்பில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது காரை நிறுத்தி போலீஸார் பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் போலீஸாரை எதிர்பாராத விதமாக தாக்கிய இந்த கும்பல், காரில் இருந்தபடியே போலீசார் மீது மிளகாய்ப் பொடியை தூவி விட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் அந்த நேரத்தில் கும்பலை பிடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

இப்படி கோவையில் இருந்து தப்பிய கும்பல் அடுத்ததாக தேனி மாவட்டத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஒருவரின் வீட்டை குறிவைத்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், அங்கிருந்த சுமார் 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.

காவல் அதிகாரியின் வீட்டிலேயே நடந்த இந்த கொள்ளை சம்பவம் போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தமிழகத்தில் இருந்தால் போலீஸாரிடம் சிக்கிவிடக்கூடும் எனக் கருதிய கும்பல், மாநிலத்தை விட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு சில மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர்கள், போலீஸாரின் கண்காணிப்பில் இருந்து சில காலம் தப்பிய நிலையில் தொடர்ந்து தங்கள் கொலை, வழிப்பறி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சில மாதங்கள் டெல்லியில் பதுங்கியிருந்த கும்பல், கடந்த மாதம் தான் விமானம் மூலம் மீண்டும் தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது.

தமிழகம் வந்த இந்த 9 பேரும் , சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதிக்குச் சென்று, அங்கு ஒருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவங்களில் மட்டுமின்றி கொலை வழக்கிலும் தொடர்புடைய இந்தக் கும்பல் மீண்டும் கோவையில் பதுங்கியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் எண்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு தகவல்களை அடிப்படையாக வைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் இந்த 9 பேர் கொண்ட கும்பல் மீண்டும் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.

இறுதியில் குனியமுத்தூர் போலீஸார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், கும்பலின் தலைவன் உட்பட 9 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள், குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து 9 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் மாணவர்களை மிரட்டி தொடங்கிய குற்றச் சம்பவங்கள், போலீஸாரை மிளகாய்ப் பொடி தூவி தப்பியது, தேனியில் 100 சவரன் கொள்ளை, டெல்லியில் தலைமறைவு, விமானத்தில் தமிழகம் திரும்பி கீழடியில் கொலை என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களின் பின்னணியில் இந்த 9 பேர் கொண்ட கும்பல் சிக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கும்பலுக்கு மேலும் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலம் பறிபோகும் அபாயம்? கோவையில் 96 குடும்பங்கள் தவிப்பு!

கோவை சரவணம்பட்டியில் 9.54 ஏக்கர் நில விவகாரம் தொடர்பாக 96 குடும்பங்களின் நில உரிமை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குற்றச்சாட்டு

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...