கோவை : கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே முதியவரிடம் செல்போனைப் பறித்துச் சென்றதாக கூறப்படும் வடமாநில வாலிபரை பொதுமக்கள் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வெளியூரில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்றில் குடும்பத்துடன் வந்த ஒருவர், தனது குடும்பத்தினருடன் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அவருடன் வந்த அவரது முதிய மாமனார் பேருந்து அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், முதியவரின் கையில் இருந்த செல்போனை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினரும், அருகில் இருந்த பொதுமக்களும் அந்த நபரை துரத்திச் சென்றுள்ளனர். சிறிது தூரம் ஓடிய அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.
VIDEO
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பிடிபட்ட நபரை மீட்டு அருகில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபர் இந்தியில் பேசியதாக கூறப்படுகிறது.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இதற்கு முன்பு காந்திபுரம் பகுதியில் இதுபோன்ற செல்போன் அல்லது பணப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே முதியவரிடம் செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவமும், அவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





