கோவை: விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை பல ஆண்டுகளாக வழங்காத நிலையில், கோவையில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் எதிரே நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி (34). கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி, இவர் தனது 2 நண்பர்களுடன் ஸ்கூட்டரில் காளம்பாளையம் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் பட்டுசாமி உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து பட்டுசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பட்டுசாமியின் குடும்பத்தினர், விபத்தில் உயிரிழந்ததால் ஏற்பட்ட இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கோவை 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பட்டுசாமியின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 51 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் கடந்தும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் தாமதமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பட்டுசாமியின் குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். அப்போது, உத்தரவிட்ட தொகைக்கு வட்டி உள்ளிட்டவற்றை சேர்த்து தற்போது சுமார் ரூ.40 லட்சம் வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலதாமதம் செய்தது தொடர்பாக மனு விசாரணைக்கு வந்த நிலையில், ரூ.40 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, இழப்பீட்டு தொகை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி, கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கணுவாய், காளிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் அடையாளம் காணப்பட்டு ஜப்தி செய்யப்பட்டன. பின்னர் அந்த பஸ்கள் கோர்ட் ஊழியர்களால் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் எதிரே கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் பணப்பலன்கள் வழங்காதது தொடர்பான வழக்கில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், மீண்டும் ஒரே நாளில் 5 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





