கோவை: கோவையில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்ய முயன்ற போது, காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துத் தொங்கியபடி 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடத்தல்காரர்களைச் சாதுரியமாக மடக்கிப் பிடித்த கோவில்பாளையம் காவல் துறையினரின் த்ரில்லிங் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் வழக்கம் போல தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் சொகுசு கார் ஒன்றை போலீஸார் நிறுத்திச் சோதனையிட்டனர்.
காரின் பின் இருக்கையில் மூட்டை மூட்டையாகப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, உதவி ஆய்வாளர் விக்னேஷ் அதை ஆய்வு செய்ய முற்பட்டார்.
அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள், உதவி ஆய்வாளரைத் தள்ளி விட்டு விட்டு, கதவுகளைச் சாத்திக் கொண்டு காரை அதிவேகமாக இயக்கினஎ.
கடத்தல்காரர்கள் தப்ப முயன்றதைக் கண்டு கணநேரத்தில் செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகன், ஓடும் காரின் மேற்கூரையின் மீது பாய்ந்து குதித்து, காரைப் பலமாகப் பிடித்துக் கொண்டார்.
தலைமை காவலர் மேலேயே தொங்கிக் கொண்டு இருப்பதைப் பொருட்படுத்தாதக் கடத்தல்காரர்கள், காரை நிறுத்தாமல் விளாங்குறிச்சி, காளப்பட்டி நாலு ரோடு, சித்ரா வழியாகக் கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி அதிவேகமாக சென்றனர்.
கணியூர் டோல்கேட்டில் ‘அட்வான்ஸ் ஃபாஸ்ட் டிராக்’ வசதியைப் பயன்படுத்தி சுங்கச்சாவடித் தடைகளை உடைத்துக் கொண்டு கார் மேலும் பறந்தது.
காரின் கூரையில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற தலைமை காவலர் வேல்முருகனைக் காப்பாற்றவும், கடத்தல் காரர்களைப் பிடிக்கவும் பின்னாலேயே வந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் காட்சிகளைப் பதிவு செய்தனர்.
அதே நேரத்தில், இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கணியூர் போலிஸ் ரோந்து வாகனம், கணியூர் ஆம்புலன்ஸ், எல்.ஜி மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் ‘சினேகம்’ ஆம்புலன்ஸ் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த காரைத் தீவிரமாகத் துரத்திச் சென்றனர்.
உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவிநாசி போலீஸாரும் காரை எதிர்நோக்கி வந்தனர். இறுதியில், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே சென்ற போது, ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தன.
VIDEO
காரை நிறுத்தியதும் அதில் இருந்த இருவர் தப்பிய நிலையில், ஒருவரை போலீஸார் உடனடியாகப் பிடித்தனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ், ராஜேஷ், பாப்பாதரம் என்பது தெரியவந்தது.
மூவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் பெங்களூரில் இருந்து சுமார் 300 கிலோ எடை உள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவையில் கைமாற்ற முயன்றது தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த கோவில்பாளையம் போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 300 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரைப் பொருட்படுத்தாமல் காரின் கூரையில் 40 கி.மீ தூரம் தொங்கியபடி சென்று கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகனின் இந்தத் தீரச் செயல் மற்றும் அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் நண்பர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.





