கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கோவை: கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Advertisement

கூகுள் டீப்மைண்ட் மற்றும் காகிள் இணைந்து நடத்திய உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி ஹேக்கத்தானில், கோவையைச் சேர்ந்த ஏஐ ஆராய்ச்சியாளரும் ஐஐடி சென்னை மாணவருமான அர்ஜுன் திலக் உலகளவில் முதலிடம் பெற்று ரூ.24 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

அவரது சாதனையை பாராட்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார், நேரில் அழைத்து கௌரவித்ததுடன், முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

கோவையைச் சேர்ந்த அர்ஜுன் திலக், லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் செயல்பட்டு வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தில் ஏஐ ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருவதுடன், ஐஐடி சென்னை மாணவராகவும் உள்ளார். அவருடன் இணைந்து ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் உருவாக்கிய “கேஜ்” (CAGE) என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டு கருவி, உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

கூகுள் டீப்மைண்ட் மற்றும் காகிள் இணைந்து “AGI Progress Measurement: Cognitive Abilities” என்ற தலைப்பில் நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகள் பங்கேற்றன.

மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) பரிசுத் தொகைக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றை அர்ஜுன் திலக் மற்றும் ராம்குமார் ஆகியோரின் அணி வென்று, 25,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.24 லட்சம்) பரிசுத் தொகையை பெற்றது.

Advertisement

அவர்கள் உருவாக்கிய “கேஜ்” மதிப்பீட்டு முறை, ஒரு ஏஐ மாடலுக்கு தனக்குத் தெரியாத விஷயங்களை உணர்ந்து, தேவையான நேரத்தில் மனித உதவியை நாடும் திறன் உள்ளதா என்பதை சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

270 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேள்விகளின் மூலம், ஏஐ மாடல்கள் கேள்வியின் சிக்கலை மதிப்பிட்டு, தங்களது நம்பகத்தன்மையை கணித்து, பதிலளிக்க வேண்டுமா அல்லது மனித மேற்பார்வைக்கு ஒப்படைக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இந்த முறை செயல்படுகிறது.

இந்த ஆய்வில் கூகுள் ஜெமினி, ஏந்த்ரோபிக் கிளாட், அலிபாபா க்வென், டீப் சீக் உள்ளிட்ட உலகின் முன்னணி எட்டு ஏஐ மாடல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதிக திறன் கொண்ட ஏஐ மாடல்கள் அனைத்தும் சுய விழிப்புணர்வுடன் செயல்படவில்லை என்பதையும், சில மாடல்கள் தங்களுக்கு உறுதியாகத் தெரியாத கேள்விகளில் மனித உதவியை நாடியதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அரசு, கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், “எனக்கு உறுதியாகத் தெரியவில்லை; மனிதர் சரிபார்க்க வேண்டும்” என்று ஏஐ மாடல்கள் தெரிவிக்கும் திறன் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனையை பாராட்டும் வகையில், கோவை மாவட்ட பொறுப்பாளரும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத் குமார், அர்ஜுன் திலக்கை நேரில் அழைத்து கௌரவித்தார்.

அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர், மேலும் பல சாதனைகள் படைத்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். அதோடு, தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான நேரத்தையும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

புதிய அரசுக்கு காலம் கொடுக்க வேண்டும்- கோவையில் துணை குடியரசுத் தலைவர் பேட்டி…

கோவை: புதிய அரசுக்கு காலம் கொடுக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என துணை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனை விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...