மேட்ரிமோனியில் பெண் பெயரில் பேச்சு… பின்னர் டிரேடிங் ஆசை! கோவையில் ரூ.3.07 கோடி மோசடி!

கோவை மாவட்டத்தில் திருமண வரன் தேடும் ஆண்களை குறிவைத்து மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் சைபர் மோசடி நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் கடந்த 8 மாதங்களில் மட்டும் இதுதொடர்பாக 56 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஆண்கள் ரூ.3 கோடியே 7 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக வலைதளங்களில் பரிசு கிடைத்துள்ளதாக கூறுவது, நண்பர்கள் போல் போலி கணக்குகளை உருவாக்கி அவசர உதவி கேட்பது, பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறுவது, ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டுவது என பல்வேறு வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

இதுமட்டுமின்றி, லோன் வாங்கித் தருவதாக கூறுவது, அரசியல் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் பேசுவது போல் தொலைபேசியில் தொடர்பு கொள்வது, வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது என மோசடி கும்பல்கள் தொடர்ந்து புதிய வழிமுறைகளை கையாண்டு வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், தற்போது திருமண வரன் தேடும் ஆண்களையும் குறிவைத்து மேட்ரிமோனி மோசடி நடைபெற்று வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக 30 முதல் 40 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண்கள் மேட்ரிமோனி இணையதளங்களில் தங்களது பெயர், வயது, முகவரி, வேலை, சொத்து விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்கின்றனர்.

Advertisement

மேலும், தங்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், அவர்களின் கல்வி, வேலை, வயது உள்ளிட்ட எதிர்பார்ப்புகளையும் குறிப்பிடுகின்றனர்.

இந்த தகவல்களை மோசடி கும்பல்கள் பயன்படுத்திக் கொள்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்கள் பெயரில் போலியான சுயவிவரங்களை உருவாக்கி, திருமண வரன் பார்ப்பது போல் ஆண்களை தொடர்பு கொள்கின்றனர்.

முதலில் அன்பாக பேசி… பின்னர் பணம் கேட்டு மோசடி

மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொள்ளும் பெண், தான் வெளிநாட்டு நிறுவனத்தில் அல்லது பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிமுகம் செய்து கொள்வார்.

தொடர்ந்து சில நாட்கள் பேசி, நம்பிக்கையை ஏற்படுத்துவார். பின்னர் சிறிய அளவில் பணம், செல்போன் அல்லது விலை உயர்ந்த பொருட்களை கேட்டு பெறுவதாகவும், அதன்பிறகு திடீரென தொடர்பை துண்டித்துவிடுவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

மற்றொரு வகையில், சில பெண்கள் திருமண வரன் பார்ப்பது போல் ஆண்களிடம் பழகி, தான் ஆன்லைன் டிரேடிங் செய்து வருவதாக கூறுகின்றனர்.

அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், பின்னர் இருவரது எதிர்கால திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசலாம் என்றும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

இதனை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சிறிய தொகையை முதலீடு செய்கின்றனர். ஆரம்பத்தில் லாபம் கிடைப்பது போல் மோசடி கும்பல் காண்பித்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து அதிக தொகையை முதலீடு செய்ய வைக்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்ட பின்னர், தொடர்பு கொண்ட பெண்ணையும், பணம் செலுத்திய ஆன்லைன் தளத்தையும் தொடர்பு கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மேட்ரிமோனி மோசடி தொடர்பாக மொத்தம் 56 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ரூ.3 கோடியே 7 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளனர்.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் மட்டும் 30 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் ரூ.2 கோடியே 50 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் 26 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் ரூ.57 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளனர்.

மேட்ரிமோனி இணையதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் தகவல்களை முழுமையாக சரிபார்த்த பிறகே திருமணம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, திருமண வரன் என்ற பெயரில் அறிமுகமாகும் நபர் பணம் கேட்பது, முதலீடு செய்ய வலியுறுத்துவது அல்லது விலை உயர்ந்த பொருட்களை கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்களின் வேலை, முகவரி, குடும்ப பின்னணி உள்ளிட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட நபரும், அவரது பெற்றோரும் நேரடியாக விசாரித்து உறுதி செய்த பின்னரே நம்ப வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...