கோவை : கோவை நல்லாம்பாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கோவை நல்லாம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாம்பாளையம் பகுதியில் மெக்கானிக் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பகுதியில் வழக்கமாக பல்வேறு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் வாகனங்களில் பற்றிய தீ வேகமாக பரவியது. இதையடுத்து எழுந்த சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்களும், அருகில் வசிப்பவர்களும் வெளியே வந்து பார்த்தபோது வாகனங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், அதற்குள் தீயில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
Video
இதனிடையே, சம்பந்தப்பட்ட மெக்கானிக்கிடம் சில வாலிபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை பழுது பார்ப்பதற்காக கொடுத்திருந்ததாக தெரிகிறது. ஆனால், அந்த வாகனங்களை பழுது நீக்காமல் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த அந்த வாலிபர்களே நள்ளிரவில் வந்து வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, வாகனங்களுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.





