நிழல்’ QR Code-ல் குவியும் தகவல்கள்… 2,000-க்கும் மேற்பட்ட தகவல், 7 வழக்குகள் பதிவு!

கோவை : கோவை மாவட்ட காவல்துறையின் ‘நிழல்’ கியூஆர் கோடு திட்டம் மூலம் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 145-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ரகசியத் தகவல்களின் அடிப்படையில் 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

கோவை மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்த ‘நிழல் – பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற கியூஆர் கோடு திட்டம் மூலம் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் பொதுமக்கள் அளித்த 148 புகார்களில் 145-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ரகசியத் தகவல்களின் அடிப்படையில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக கோவை உள்ளது. மாவட்டத்தில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஏராளமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

Advertisement

இதனை கருத்தில் கொண்டு சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் கடந்த ஜூலை மாதம் ‘நிழல் – பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற கியூஆர் கோடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது செல்போனில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, காவல்துறைக்கு முக்கிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க முடியும்.

Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள், சட்டவிரோத செயல்கள், பொது இடையூறுகள் உள்ளிட்டவை குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

குறிப்பாக, தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் ‘நிழல்’ கியூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கியூஆர் கோடு மூலம் பெறப்படும் தகவல்கள் கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் செயல்படும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை பெறப்பட்ட தகவல்களில் மது அருந்தி தொல்லை கொடுப்பது தொடர்பாக 24 புகார்களும், சொத்துத் தகராறு தொடர்பாக 21 புகார்களும், போக்குவரத்து தொடர்பாக 18 புகார்களும் வந்துள்ளன. திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தலா 8 புகார்களும், ஏமாற்று மோசடி மற்றும் ஆன்லைன் மோசடி தொடர்பாக முறையே 6 மற்றும் 4 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

மேலும், குடும்பத் தகராறு தொடர்பாக 3 புகார்களும், போதைப்பொருள் குற்றம், பெண்கள் பாதுகாப்பு, அடிதடி, காணாமல் போன செல்போன் தொடர்பாக தலா 2 புகார்களும், இதர பிரிவுகளில் 43 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

இதேபோல், ‘நிழல்’ கியூஆர் கோடு மூலம் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 புகார்கள் சி.எஸ்.ஆர். ஆக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடாகம் காவல் நிலையத்தில் கஞ்சா தொடர்பான வழக்குகளும், நீலம்பூர் காவல் நிலையத்தில் சூதாட்ட வழக்கும், ஆனைமலை காவல் நிலையத்தில் லாட்டரி தொடர்பான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுஇடங்களில் மது அருந்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்க ‘நிழல்’ திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவை போலீசாரின் ‘நிழல்’ QR Code திட்டம் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆன்லைன் பகுதி நேர வேலை ஆசை காட்டி ரூ.2.97 லட்சம் மோசடி! இளம்பெண் அதிர்ச்சி

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, கோவையை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.2.97 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...