கோவை: கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வர் விஜய் மற்றும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற பதாகையை ஏந்தி சிறுவர்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவையில் பெய்த கனமழையால் தடாகம் சாலை, சோமையனூர் பகுதியில் உள்ள வி.கே.வி. அவென்யூ குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியது. மேலும், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தேங்கிய மழைநீரால் பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பாதிப்புகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல்வர் விஜய் மற்றும் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற பதாகையை ஏந்தினர். அதில் “நன்றி” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
சிறுவர்கள் ஒன்றிணைந்து பதாகை ஏந்தி நன்றி தெரிவித்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






