கோவை : கோவை போத்தனூரில் மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, இரும்புக் கம்பியால் தாக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை போத்தனூர் நஞ்சேகவுண்டன்புதூர் மேற்கு தேவேந்திரா வீதியைச் சேர்ந்தவர் பிலிப் (42). தொழிலாளியான இவரது மனைவி லதாமேரி (39), வீட்டு வேலை செய்து வருகிறார். பிலிப்புக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிலிப், மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை லதாமேரி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பிலிப், அங்கிருந்த இரும்புக் கம்பியால் அவரைத் தாக்க முயன்றுள்ளார்.
அப்போது லதாமேரி கையால் தடுத்தபோது, அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்தது.
மேலும், பிலிப் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மகள்கள் லதாமேரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக லதாமேரி அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிலிப்பைக் கைது செய்தனர். பின்னர் அவர் மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






