கோவை : ரியல் எஸ்டேட் தொழிலில் கிடைக்க வேண்டிய ரூ.6 லட்சம் கமிஷன் தொகையை தராமல், துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுப்பதாக கூறி வாலிபர் ஒருவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022-ம் ஆண்டு திருச்சி ரோடு, சுங்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குச் சொந்தமான 13.25 சென்ட் நிலம் மற்றும் வீட்டை விற்பனை செய்ய இருப்பதாக என்னை அணுகினர்.
இதையடுத்து, சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த சொத்து ரூ.3 கோடியே 15 லட்சத்துக்கு விற்பனை செய்ய விலை முடிக்கப்பட்டது.
இந்த விற்பனைக்காக தம்பதியினர் ரூ.6 லட்சம் கமிஷன் தொகையை சவுரிபாளையத்தைச் சேர்ந்த எனது நண்பரிடம் கொடுத்துள்ளனர். அந்த கமிஷன் தொகையை என்னிடம் வழங்குமாறு பலமுறை கேட்டும், அவர் தொடர்ந்து காலம் கடத்தி வந்தார்.
பின்னர், அந்த பணத்தை தர முடியாது என்றும், துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். மேலும், அவர் ஏற்கனவே பல போலீஸ் அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, எனக்கு வர வேண்டிய ரூ.6 லட்சம் கமிஷன் தொகையை பெற்றுத் தருவதுடன், கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.





