கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை கோட்டை பிரிவு பகுதியில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்கள் திருடப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோட்டை பிரிவு பகுதியில் சமீபகாலமாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்கள் மாயமாவதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 3 முதல் 4 சிறுவர்கள் வரை ஒன்றாக வந்து செல்வதைப் பொதுமக்கள் கவனித்ததாகக் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில் வீடுகளின் முன்புறம் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் சேவல்களைப் பிடித்துச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளது. பின்னர், அவர்கள் அங்கிருந்து விரைவாகத் தப்பிச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி விற்பனைக்காகத் திருடப்படுகிறதா?
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சேவல்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. பண்டிகைக் காலத்தில் சேவல்களை விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் இத்தகைய திருட்டுகள் நடைபெறுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், சேவல்கள் எதற்காகத் திருடப்படுகின்றன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
வீடுகளில் செல்லப்பிராணிகளைப் போலவும், தோட்டங்களில் ஆர்வத்துடனும் வளர்க்கப்படும் சேவல்கள் திருடப்படுவதாக எழுந்துள்ள புகார், பொதுமக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கோட்டை பிரிவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சேவல் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் வேறு யாரேனும் செயல்படுகிறார்களா என்பதையும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






