கோவை: கோவை நஞ்சை கவுண்டன்புதூரில் காலி நிலத்தில் வளர்க்கப்பட்ட 5 கஞ்சா செடிகளைப் போலீசார் பறிமுதல் செய்து, இளைஞரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
கோவை, துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் காலி நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை நடத்தி 5 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர்.
நஞ்சை கவுண்டன்புதூர், பரமசிவன் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் சந்த் ஜெய்ஸ்வாலின் மகன் ஆஷிஷ் ஐஸ்வான் (24) என்ற ஆயுஷிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
காந்திபுரத்தில் உள்ள பேரிங் விற்பனைக் கடையில் பணிபுரிந்து வரும் இவர், தனது தாயுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவரது உறவினருக்குச் சொந்தமான சுமார் 5 சென்ட் காலி நிலத்தில் அமைந்துள்ள பழைய வீட்டின் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, துடியலூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வளர்க்கப்பட்டிருந்த 5 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.





