கோவை : கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபரிடம் போக்சோ கோர்ட்டில் பூட்டிய அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சூலூர் பகுதியில் கடந்த மே மாதம் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், சாட்சி விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து வழக்கு நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீசார் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் பூட்டிய அறையில் கார்த்தியிடம் சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகனிடமும் சம்பவம் தொடர்பாக கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.





