கோவை: கோவையில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குளுகுளுவென பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் தற்போது சீதோஷ்ண நிலையில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கோவையில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
காலநிலை மாற்றம், நகரமயமாக்கல், மரங்கள் வெட்டப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் கோவையில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படுவதாக கூறப்படுகிறது.
கோவையில் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், நகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகவில்லை. புறநகரின் சில பகுதிகளில் மட்டும் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக கோவை மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், கோவையில் செப்டம்பர் 8-ம் தேதி அதிகபட்சமாக 34.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோவையின் இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை ஈரோட்டில் 39.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
கோவையில் மற்ற சில மாவட்டங்களை காட்டிலும் வெப்பநிலை குறைவாக இருந்தாலும், இயல்பை விட அதிகமாக பதிவாகி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
அதிகரிக்கும் வெப்பம்
குளிர்ச்சியான காலநிலைக்கு பெயர் பெற்ற கோவையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மரங்களை பாதுகாப்பது, நகர்ப்புறங்களில் அதிக அளவில் பசுமைப் பகுதிகளை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கோவையின் இயற்கையான சூழலை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.





