வெள்ளைக் கம்பளம் போர்த்திய உதகை! உறைபனியால் உறைந்த புல்வெளிகள்! – VIDEO

உதகை: உதகையில் வழக்கத்தை விட முன்கூட்டியே உறைபனிப் பொழிவு தொடங்கியுள்ளது. இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகப் பதிவான நிலையில், புல்வெளிகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து குட்டி காஷ்மீராகக் காட்சியளிக்கிறது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனிப் பொழிவு அதிகமாகக் காணப்படுவது வழக்கம். குறிப்பாக, டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு உறைபனியின் தாக்கம் தீவிரமடைந்து, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவும்.

ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நவம்பர் மாதத்திலேயே உறைபனிப் பொழிவு தொடங்கியுள்ளது. கடந்த மாதம் மற்றும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டின் முதல் உறைபனிப் பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக உதகை காந்தல் முக்கோணம், தலைக்குந்தா, லவ்டேல், குதிரைப் பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, எச்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

Advertisement

புல்வெளி மைதானங்கள், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மரங்கள், செடிகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் புல்வெளிகள் முழுவதும் வெள்ளை நிறத்தில் மாறியிருந்ததால், உதகையின் பல்வேறு பகுதிகள் குட்டி காஷ்மீரைப் போன்று காட்சியளித்தன.

குறிப்பாக, சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகாலை நேரத்தில் இந்தப் பகுதிகள் முழுவதும் வெண்மையான பனிப்படலம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.

வழக்கமாக டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குப் பிறகே உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே கடும் உறைபனிப் பொழிவு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதிகாலை முதல் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அதிகாலையிலேயே பணிக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

குளிரின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் கம்பளி ஆடைகள் மற்றும் குளிரைத் தாங்கும் உடைகளை அணிந்தபடி வெளியே சென்றனர். மேலும், பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி, அதன் அருகே அமர்ந்து குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், இன்று காலை உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியுள்ள உறைபனிப் பொழிவு காரணமாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...