கோவை: கோவை வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் கிளினிக் திறக்கும் நேரம் குறித்து பேச்சுக் கொடுத்து, அவரது கவனத்தை திசைதிருப்பி 4 பவுன் தங்கச் செயினை பறித்த வழக்கில் கல்லூரி காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நகை, 2 செல்போன்கள் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30-ம் தேதி மாலை சரஸ்வதி என்பவர் உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாஸ்க் அணிந்த இளைஞர் ஒருவர் அவரிடம் வந்து, “அருகில் உள்ள கிளினிக் எப்போது திறக்கும்?” என கேட்டுள்ளார்.
அதற்கு சரஸ்வதி பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த இளைஞர் மருத்துவரின் வீடு எங்கு உள்ளது என்றும் விசாரித்துள்ளார். அவர் வழியைக் காட்டிய அடுத்த நொடியே, எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
திடீரென சரஸ்வதியின் கழுத்தில் இருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினை பறித்த அந்த நபர், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரஸ்வதியை அருகிலிருந்தவர்கள் மீட்டனர்.
புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடம் மட்டுமின்றி, கொள்ளையன் தப்பிச் சென்ற வழித்தடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில், குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டிவிஎஸ் ஜூபிடர் வாகனத்தின் பதிவு எண் TN 99 AD 4548 போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நகைப்பறிப்பின் பின்னணியில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வயதான பெண்களை குறிவைத்து நகைகளை பறிக்க கல்லூரி மாணவியும், மாணவனும் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கைக்காகவும், மாணவனின் கடனை அடைப்பதற்காகவும் இருவரும் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவன் மாஸ்க் அணிந்து சென்று சரஸ்வதியிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசைதிருப்பியதும், பின்னர் செயினை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதலில் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். அவரிடம் கிடைத்த தகவலின் பேரில், கே.ஜி. சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவனையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து சுமார் 4 பவுன் தங்கச் செயின், 2 செல்போன்கள் மற்றும் நகைப்பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளினிக் குறித்து சாதாரணமாக பேச்சை தொடங்கிய சம்பவம், சில நொடிகளில் நகைப்பறிப்பாக மாறிய நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் கல்லூரி காதலர்களின் திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.





