கோவை: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்தத் தொகை, தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப போதுமானதாக இல்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாத சூழல் நிலவுவதாகக் கூறிய அவர்கள், மாதாந்திர உதவித்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அண்டை மாநிலங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,600 முதல் ரூ.6,000 வரை உதவித்தொகை வழங்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசும் தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உதவித்தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதுதவிர, அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதேபோல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களைக் கண்டறிந்து, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்புத் தேர்வுகளை நடத்தி, தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.
தங்களது நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் நேரடியாக எடுத்துரைக்கும் வகையில், அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தங்களது கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொண்டனர்.





