கோவை: காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து நண்பருடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில், ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூரில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகிய இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து பானம் கொடுத்து, நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், வீடியோ எடிட்டிங் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் ஆன அவர், கருத்து வேறுபாடு காரணமாக 2023-ஆம் ஆண்டு கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது சூலூர் கலையரங்கம் பின்புறம் வாடகை அலுவலகம் ஒன்றில் வீடியோ எடிட்டிங் பணியை மேற்கொண்டு வருகிறார்.
அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள அறையில் தங்கி இருந்த அந்தோணி மரிய ராபின் (28) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குடும்ப சூழலை அறிந்த அவர், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனை நம்பி இருவரும் கடந்த ஒரு ஆண்டாக நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், அந்தோணி மரிய ராபினுக்கு வேறுொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று அந்தோணி மரிய ராபின் தனது நண்பரான கிரிஷ் சாமுவேல் குமார் (30) என்பவருடன் அந்த பெண்ணின் அலுவலகத்திற்கு சென்று சமாதானம் பேச முயன்றுள்ளார். அப்போது, இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்ததாகவும், அதை அருந்திய அவர் மயக்கமடைந்த நிலையில் இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மயக்கம் தெளிந்த பெண் இதுகுறித்து கேட்டபோது, பாலியல் உறவை செல்போனில் வீடியோ பதிவு செய்திருப்பதாக கூறி, திருமணம் குறித்து வற்புறுத்தினாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும், அவரையும் அவரது மகனையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.


