கோவையில் வேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறை; எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தெரியுமா?

கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன? எந்தெந்தப் பகுதிகளில் முதலீடு செய்யலாம்? முதலீடு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்த விரிவான அலசலை இந்தக் கட்டுரையில் காணலாம்.

கோவைக்கு குறி…

தமிழகத்திலேயே சென்னையில் தான் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சென்னை மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் வளர்ச்சியைக் கண்டுள்ளன. தமிழக அரசின் நிர்வாக மாவட்டமான சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைத் தாண்டி, தமிழகத்தில் வேறு எங்கு ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு ஏற்றவை இல்லையா? என்று கேள்வி கேட்டால், அதற்கு பதிலாகத்தான் கோவையை கைகாட்டுகின்றனர் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள்.

Advertisement

டஃப் கொடுக்கும் கோவை

பெரிய பெரிய நகரங்களையும் தாண்டி, கோவை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இங்கு முன்பை விட ஐ.டி., வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதை ஏன் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது என்றால், சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களும், ஐ.டி., துறையில் வளர்ச்சியடைந்த பிறகே, அங்கு ரியல் எஸ்டேட்டிலும் பெரிய வளர்ச்சியைக் கண்டன.

Advertisement

தென்னிந்தியாவின் பெருநகரங்களான சென்னை, பெங்களூருக்கு அடுத்தபடியாக, கோவை, கொச்சி போன்ற 2ம் தர நகரங்களுக்கு, கல்விக்காகவும், வேலைக்காகவும் பொதுமக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே, அவர்களின் குடியிருப்பு வசதிக்காகவும் ரியல் எஸ்டேட் துறையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, கோவையில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடைந்து வருகிறது.

பெருநகரங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மால்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கோவையில் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மட்டுமல்லாமல் முழு தென்னிந்தியாவிலுமே ஒரு பரபரப்பான முக்கிய தொழில் மையமாக வேகமாக உருவெடுத்து வருகிறது.

சாதகம்

கோவையில் ரில் எஸ்டேட் துறையின் வளர்ச்சி குறித்து, கோலியர்ஸ் (Colliers) என்ற நிறுவனம் வெளியிட்ட ‘சமச்சீர் வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் மையங்கள்’ என்ற அறிக்கையின்படி, எதிர்வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சித் திறன் கொண்டதாக கண்டறியப்பட்ட 30 நகரங்களில் கோவையும் ஒன்றாகும். இந்த 30 நகரங்களில், கோவை உட்பட 17 நகரங்கள் பல வகையான சொத்துத் துறைகளிலும் விரைவான ரியல் எஸ்டேட் வளர்ச்சியைக் காணும், என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது முதலீட்டாளர்கள், வீடு வாங்குபவர்கள், வாடகைதாரர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

கோவையில் ரியல் எஸ்டேட் முதலீட்டைத் தீர்மானிக்கும் காரணிகளாக 4 விஷயங்கள் பார்க்கப்படுகிறது.

  1. குறைந்த விலை
  2. கல்வி மற்றும் மருத்துவ வசதிகள்
  3. தொழில்துறை
  4. போக்குவரத்து வசதி

1.குறைந்த விலை

சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களை ஒப்பிடும் போது கோவையில் ஒரு சதுர அடியில் விலை மிகக்குறைவாக உள்ளது. அதாவது ஒரு சதுர அடி சராசரியாக ரூ.5,100 முதல் ரூ.5,400 வரையில் விற்கப்படுகிறது. வீடுகள் கட்டி வாடகைக்கு விடுதல், அபார்ட்மென்ட்கள், வணிக வளாகங்கள் போன்றவை சிறந்த முதலீட்டு தேர்வுகளாகும். அதில், இடத்தைப் பொறுத்து தங்களின் முதலீட்டை தேர்வு செய்தால், வருவாய் மிக்கதாக இருக்கும். அதாவது, உதாரணத்திற்கு, ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் பெருமளவில் இருப்பதால், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி என்பதால், அபார்ட்மென்ட்டுகளும், பட்ஜெட் வீடுகளும் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன. முதலீட்டுச் செலவு கோவை நகரின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவு. வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சொத்துக்களைக் காலியாக விடாமல் தொடர்ச்சியான வாடகை வருமானம் ஈட்ட இது மிகச் சிறந்த இடமாக உள்ளது.

2.கல்வி மற்றும் மருத்துவ வசதிகள்

நகரத்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும் சுகாதார மையங்களும் வீடுகளுக்கான தேவையை அதிகரிக்கின்றன. இவை வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, குடும்பங்களையும் தொழில்முறை வல்லுநர்களையும் ஈர்த்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கின்றன.

பி.எஸ்.ஜி குழும நிறுவனங்கள்,கே.எம்.சி.ஹெச் & என்.ஜி.பி குழும நிறுவனங்கள்,கற்பகம் குழும நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதேபோல, கே.ஜி மருத்துவமனை, கொங்குநாடு மருத்துவமனை, கே.எம்.சி.ஹெச் , ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைகள், ராயல் ஹெல்த்கேர் போன்ற பிரபல மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன.

3.தொழில்துறை

வளர்ச்சியடைந்த தொழில்துறையைக் கொண்டுள்ள நகரங்களின் பட்டியலும் கோவைக்கு இடம் உள்ளது. ஐ.டி., சார்ந்த சேவைத்துறைகள், மருத்துவத்துறை, ஜவுளித்துறை மற்றும் ஆட்டோமொபைல், எலக்ட்டிரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தி ஆலைகள் பெருகிக் காணப்படுகின்றன. கொடிசியா , சீமா மற்றும் கொங்கு குளோபல் போரம் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறை அமைப்புகள் கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. தமிழக அரசின் சாதகமான தொழிற் கொள்கையின் காரணமாக, தொழில்துறையினர் உற்பத்தித் தேவைகளுக்காக தமிழகத்தை, குறிப்பாக கோவை போன்ற நகரங்களை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

4.போக்குவரத்து வசதி

கோவையின் வளர்ச்சிக்கு நகரத்தின் வலுவான போக்குவரத்து வசதியே முக்கிய காரணியாகும். சாலை, ரயில் மற்றும் விமானம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகள் கோவை ரியல் எஸ்டேட் முதலீட்டிற்கு சாதகமான இடமாக மாற்றியுள்ளன.

5 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் கோவையை சேலம், கொச்சி, திருச்சி, ஊட்டி, மைசூர், பெங்களூரு போன்ற நகரங்களுடன் இணைக்கின்றன.விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கும் கோவை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்குகிறது. அதேபோல, கோவை ரயில்நிலைய சந்திப்பு தென்னிந்தியாவின் முக்கிய ரயில் மையமாக விளங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இந்த நகரத்தை இணைக்கிறது. இவை கோவையை உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு மேலும் எளிதில் செல்லக்கூடியதாக மாற்றுகிறது.

முதலீட்டுக்கு உகந்த பகுதிகள்

சரவணம்பட்டி, பீளமேடு, காளப்பட்டி, விளாங்குறிச்சி, துடியலூர், கணபதி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், வேடப்பட்டி ஆகியவை முதலீடு செய்வதற்கு உகந்த பகுதிகளாகும். ஏனெனில், இந்தப் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள்,தொழில் நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐடி மற்றும் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி, தங்களின் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் வீடுகளை வாடகைக்கு எடுக்க விரும்புபவர்களை ஈர்க்கிறது.குறைவான விலையில் விற்கப்படும் மனைகளில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும். அதேவேளையில், குடியிருப்புகள், அபார்ட்மென்ட்டுகளை கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருவாய் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாடகை வருமானம்

கோவை ரியல் எஸ்டேட் முதலீட்டுச் சூழல் குறிப்பிடத்தக்க வாடகை லாபத்தை வழங்குகிறது. இது சீரான வருவாயை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாகும். கோவையில் சராசரி வாடகை வருவாய் மாதம் ரூ.10,749 ஆக உள்ளது. மேலும், சொத்தின் இருப்பிடம் மற்றும் வகையைப் பொறுத்து வாடகை விகிதங்கள் ரூ.3,500 முதல் ரூ.25,000 வரை மாறுபடும். எனவே, முதலீட்டாளர்கள் சிறந்த வாடகை வருவாயை எதிர்பார்க்கலாம். குறிப்பாக வணிக மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை மண்டலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாடகை பன்மடங்கு அதிகமாகும்.

சவால்கள்

கோவையின் சொத்துச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்த சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும்.

தலைப்புப் பத்திரங்கள், வில்லங்கச் சான்றிதழ்கள் மற்றும் கட்டிட அங்கீகாரங்கள் உட்பட அனைத்து சொத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

சொத்து வரிகள் மற்றும் மூலதன ஆதாய வரிகள் உட்பட உங்கள் முதலீட்டின் வரி தாக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ரியல் எஸ்டேட் சந்தையைப் பாதிக்கக்கூடிய பொருளாதாரப் போக்குகள் மற்றும் அரசாங்கக் கொள்கைகளைக் கவனிக்க வேண்டும்.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

இன்றைய ராசிபலன் (ஜூலை 28): 12 ராசிகளுக்கான பலன்கள்

ஜூலை 28-ஆம் தேதிக்கான 12 ராசிகளின் தினபலன்களை அறிந்து கொள்ளுங்கள். வேலை, தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம், கல்வி மற்றும் உறவுகள் தொடர்பான பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...