கோவை: கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 24 வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வார்டு எண் 1 முதல் 29 வரையிலான பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்படி, சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சித்தாபுதூர், பாரதி நகர், ஆர்.எஸ்.புரம், சவுடாம்பிகா நகர், சரவணம்பட்டி, அம்மன் நகர், காந்தி நகர், உமையாம்பாளையம், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், கணபதி மாநகர் 3-வது பிளாக் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல், அனுராதா நகர் பகுதியில் பிரதான சாலை மற்றும் இணைப்புச் சாலைகள் சீரமைத்தல், சேரன் பகுதி உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு உபகரணங்கள் சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மொத்தம் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் 24 வளர்ச்சிப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, வார்டு எண் 28-க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் சோபா நகர் 2-வது பகுதியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





