கோவை: வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் துவங்குகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் இன்று துவங்குகிறது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் மக்கள் தாங்களாகவே சுய விவரங்களை பதிவு செய்யும் பணிகளானது ஜூலை 17ஆம் தேதி முதல் துவங்கி நேற்று ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிகள் ஆனது இன்று முதல் துவங்குகிறது. இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1ம் தேதி இன்று முதல் துவங்கி 31ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று பணியாளர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள். பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 33 கேள்விகள் அடங்கிய கேள்விதாள்களை கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் அது குறித்து கேட்டறிந்து விவரங்களை பதிவு செய்வார்கள்.
மேலும் இந்த விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்கு அவர்களுக்கு செல்போன் செயலியும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது
பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்கி அவர்களின் கேள்விக்கு சரியான பதிலை கொடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த கணக்கெடுப்பின் பொழுது எந்த ஒரு ஆவணங்களும் பொதுமக்கள் தருவதற்கு தேவையில்லை என்றும் பணியாளர்கள் கேட்கும் பட்சத்தில் ஆவணங்களை சரி பார்ப்பதற்காக மட்டும் காண்பித்தால் போதுமானது. ஆன்லைன் மூலம் சுய விவரங்களை பதிவு செய்து இருந்தால் அதில் கிடைக்கப்பெற்ற 12 இலக்க எண்களை பணியாளர்களிடம் தெரிவித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்பொழுது வீட்டில் யாரும் இல்லை என்றால் அண்டை வீட்டாரிடம் தெரிவித்து விட்டு செல்வார்கள் மற்றொரு நாள் வீட்டிற்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





