விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையை பின்பற்ற வேண்டும்- கிருஷ்ணராஜ் வாணவராயர்…

கோவை: விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் என கிருஷ்ணராஜ் வாணவராயர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் என ஐநா அங்கீகாரம் பெற்ற பொள்ளாச்சி விவசாயி வள்ளுவனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.

Advertisement

விவசாய நிலத்தின் அங்கக கரிம அளவை அதிகப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய உலகளாவிய போட்டியில் விருது வென்ற இந்தியாவின் ஒரே இயற்கை விவசாயியான தமிழகத்தைச் சேர்ந்த வி.டி. வள்ளுவன் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.வி. அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கல்வியாளர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம. கிருஷ்ணன், விவசாயி வள்ளுவனுக்குச் சிறப்புச் செய்தார்.

இவ்விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், “வள்ளுவன் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பொறியாளர் ஆவார். சத்குருவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதிக்கு வந்து, 7 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்யத் துவங்கி உள்ளார். உற்பத்திச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கினார்.

அந்த 7 ஏக்கரில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, சிறிது சிறிதாக சேர்த்து இன்று கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். இவருக்கு இப்போது என்ன லாபம் கிடைக்கிறது என்பதை நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் அது பெரிய விஷயம். முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்ற விவேகானந்தரின் சிந்தனைக்கு இவர்களது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

இவருடைய இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் இரண்டு முக்கியத் தாக்கங்கள் இருப்பதாக அவர் கூறினார். முதல் தாக்கம் சத்குரு, இரண்டாவது தாக்கம் நம்மாழ்வார். விவசாயிகளுக்கு இன்னொரு தாக்கமும் வர வேண்டும், அது மகாத்மா காந்தியினுடைய தாக்கமும் வர வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன்.

இவ்விழாவை ஏற்பாடு செய்த ‘நமது நம்பிக்கை’ மற்றும் ‘சிபா’ அமைப்புகளுக்குப் பாராட்டுகள். இன்று அரங்கம் நிறைந்து மக்கள் திரண்டுள்ளதைப் பார்க்கும்போது, நல்ல காலம் பிறந்துவிட்டது என்பதும், மக்கள் விவசாயத்தை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெளிவாகிறது. ‘இந்தியாவின் கலாச்சாரமே விவசாயம்தான்’ என்றார் சர்தார் வல்லபாய் பட்டேல். ‘மற்ற அனைத்தும் காத்திருக்கலாம், ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது’ என்றார் ஜவஹர்லால் நேரு. ஆகவே, விவசாயத்திற்கு எப்போதுமே அழிவில்லை” எனக் கூறினார்.

கே.பி. ராமசாமி பேசுகையில், “நமது நாட்டில் எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகளும், ஐயா நம்மாழ்வார் போன்றோரும் பாரம்பரிய விவசாயம் குறித்து எத்தனையோ புத்தகங்களை எழுதினார்கள், எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், நம் நாட்டு விவசாயிகள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வள்ளுவன் முயற்சி எடுக்க வேண்டும்.” எனக் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தனது நிலத்தில், ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் வழிகாட்டுதலில், மரம் சார்ந்த பலபயிர் பல அடுக்கு சாகுபடி முறையில் வள்ளுவன் விவசாயம் செய்து வருகிறார். நிலத்தை அதிகமாக உழாமல் இருப்பது, மூடாக்கு போடுவது மற்றும் உரப்பயிர்களை வளர்ப்பது போன்ற இயற்கை முறைகளால் இவரது நிலத்தில் மண் வளம் (கரிம கார்பன்) வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.

தென்னை மட்டுமே பயிரிடப்பட்ட ஒற்றைப் பயிர் சாகுபடி நிலமாக இருந்த தனது தோட்டத்தை, பல வகை மரங்கள், மிளகு, பழச்செடிகள் நிறைந்த ‘உணவுக் காடாக’ இவர் மாற்றியுள்ளார். இதன் விளைவாக, மண்ணின் கரிமக் கார்பன் அளவு 0.52 சதவீதத்தில் இருந்து 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய இயற்கை விவசாய முறையால் உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் செலவு குறைந்ததுடன், வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களைத் தாங்கும் வலிமையும் நிலத்திற்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம், இவரது பண்ணை வருமானமும் ஆறு மடங்கு அதிகமானது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்தச் சாதனையைப் பாராட்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய மண் ஆரோக்கிய பாதுகாவலர்கள் என்ற விவசாயிகளுக்கான போட்டியில் இவருக்கு உலகளாவிய உயரிய அங்கீகாரம் கிடைத்தது.

இவ்விழாவில் சாந்தி ஆஷ்ரம் தலைவர் டாக்டர் கேசவினோ அறம், சுழற்சங்க ஆளுநர் மாருதி, சிபாகா அமைப்பின் சுகுமார் மற்றும் ‘நமது நம்பிக்கை’ இதழின் நிறுவனர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இவ்விழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...