மாணவர் உயிரிழப்பு தொடர்பாக எங்களுக்கு வேறுஎதுவும் தெரியாது – ஹிந்துஸ்தான் கல்லூரி

கோவை: மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, எங்களுக்கு வேறுஎதுவும் தெரியாது, கல்லூரிக்கு வெளியில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

Advertisement

கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்காட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து வந்த மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, எங்களுக்கு வேறுஎதுவும் தெரியாது, கல்லூரிக்கு வெளியில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரியின் முதல்வர் ஜெயா, டீன்கள் மகுடேஸ்வரன், ஆனந்தமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசும் போது :-

Advertisement

கடந்த ஜூலை 21-ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அமுதன் மற்றும் அஜீஷ் ஆகிய இரு மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

இது குறித்து விடுதி வார்டன் கேள்வி எழுப்பிய போது ஏற்பட்ட தகராறில், பணியில் இருந்த பாதுகாவலர் மனோஜை இரு மாணவர்களும் தாக்கினர். இதில், காயமடைந்த மனோஜ்-க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, விடுதி சமையல்காரர்கள், மாணவர்களுக்கு உணவு சமைக்க முடியாது என தெரிவித்தனர். சுமார் 1,500 மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால், கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

பின்னர், ஜூலை 22-ம் தேதி அமுதன், அஜீஷ் ஆகிய இருவரும் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டனர்.

பின்னர், மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அன்று நடந்த சிசிடிவி வீடியோ பதிவுகள் காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து இரு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், ஆகஸ்ட் 11-ம் தேதி மீண்டும் கல்லூரிக்கு அழைத்து வருமாறு பெற்றோரிடம் கூறினோம்.

சஸ்பெண்ட் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோருக்கு உறுதி அளித்தோம்.

இந்நிலையில், ஆகஸ்ட் 10-ம் தேதி கல்லூரி பி.ஆர்.ஓ. ரவிக்குமாருக்கு தனியார் மருத்துவமனையில் அமுதன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அங்கு போலீசார் இருந்தனர். மேலும், அமுதன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

போலீசார் அளித்த தகவல்களை தவிர அமுதன் இறப்பு தொடர்பாக எங்களுக்கு எதுவும் இதுவரை தெரியாது. போலீசார் கேட்டதன் அடிப்படையில் மாணவர்களின் விவரங்களை அளித்து இருக்கிறோம்.

அமுதன் இறப்பு எங்களுக்கும் இழப்பு தான். இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும், அமுதன் பெற்றோர் மாணவன் போதைப்பொருள் பயன்படுத்திய கும்பல் குறித்த தகவல் தெரிவித்ததால் அவரை கொலை செய்து இருப்பதாக கூறியுள்ளனர் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கல்லூரி நிர்வாகிகள், அமுதன், அஜீஷ் மீது போதைப்பொருள் தொடர்பான எந்த நடவடிக்கையும் கல்லூரி சார்பில் எடுக்கப்படவில்லை. இதனை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்கள் மீது பாதுகாவலரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கல்லூரியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

தொடர்ந்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மாணவர்கள் குறித்து விளக்கம் கேட்டப்போது, கைது செய்யப்பட்ட அனைவரும் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் அல்ல.

சுமார் 15 மாணவர்களின் பெயர், வகுப்பு, முகவரி உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டதன் பேரில் வழங்கி இருக்கிறோம். இருப்பினும், இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் எங்களுக்கு தெரியாது.

போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து இதுவரை எந்த மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கல்லூரி மாணவர்கள் பலர் கல்லூரிக்கு வெளியே வாடகை அறைகளில் தங்கி வருகின்றனர்.

அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எங்கள் கல்லூரி 27 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த போன்ற சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கல்லூரி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...