கோவை: கோடைக்காலத்தில் கால்நடை தீவனத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க வைக்கோலைச் சேமித்து வைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அறுவடைக்குப் பின் கிடைக்கும் நெல் வைக்கோலை முறையாகச் சேகரித்து பாதுகாத்து வைக்குமாறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
கால்நடைகளுக்கு பசுந்தீவனத்துடன் வைக்கோலும் முக்கிய உலர் தீவனமாகப் பயன்படுகிறது. குறிப்பாக, நெல் அறுவடைக்குப் பிறகு அதிக அளவில் கிடைக்கும் வைக்கோல், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு முக்கிய தீவன ஆதாரமாக உள்ளது. எனவே, அறுவடைக் காலத்தில் வைக்கோலை வீணாக்காமல் சேகரித்து வைத்திருப்பது அவசியமாகும்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், கால்நடை தீவனத் தேவையை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தரமான நெல் வைக்கோலைப் பாதுகாத்து வைக்க வேண்டும். வைக்கோலைத் தீவனமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கட்டுகளாகக் கட்டி, முறையாகச் சேமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அறுவடைக்குப் பிறகு வயல்களில் வைக்கோல் எரிக்கப்படுவதையோ அல்லது வீணாக்கப்படுவதையோ தவிர்த்து, சேகரித்து பாதுகாப்பான இடங்களில் சேமிக்க வேண்டும்.
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO), சுய உதவிக் குழுக்கள் (SHG), பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து வைக்கோல் சேகரிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சேமிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய கால்நடைத் தீவனத் தட்டுப்பாட்டைத் தவிர்த்து, கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





