கோவை: மருதமலை சாலையில் தார் சாலை சீரமைப்புப் பணிகளை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார்.
கோவை மருதமலை பிரதான சாலையில் வடகோவை முதல் ஐஓபி காலனி வரை சுமார் 4.3 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் அய்யன் குட்டையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 7.25 ஏக்கர் பரப்பளவும், 132.20 மில்லியன் லிட்டர் நீர் கொள்ளளவும் கொண்ட இந்தக் குளம், கடந்த 20 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
இதனை சீரமைத்து மழைநீர் சேகரிப்புக்குப் பயன்படுத்தும் வகையில், ரூ.1.66 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குணியமுத்தூர் மலைப்பகுதி கால்வாயில் இருந்து வெளியேறும் உபரி நீரை குளத்திற்குத் திருப்பி விடுவதற்காக குமாரன் கார்டன் பகுதியில் நீரேற்று நிலையம் மற்றும் நீர் சேகரிப்புக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 900 மீட்டர் நீளத்திற்கு DI குழாய்கள் பதிக்கப்பட்டு, தலா 10 குதிரைத்திறன் கொண்ட 3 மின்மோட்டார்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் குளத்திற்கு நீர் கொண்டு சென்று சேமிக்கவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல் நாத், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ககிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் கப்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





