கோவை: கிரெடிட் கார்டு மற்றும் கடன் பெறுவதற்கு அத்தியாவசியமான சிபில் ஸ்கோரை எவ்வாறு உயர்த்துவது, அதில் இடம்பெற்றுள்ள போலியான தகவல்களை எப்படி நீக்குவது என்பது குறித்த சிறு தொகுப்பை தற்போது காணலாம்.
காலம் மாற மாற நமது தேவைகளும், அத்தியாவசியப் பொருட்களின் தன்மையும் மாறிக் கொண்டே வருகிறது. ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மிகவும் அடிப்படையான ஒன்று. ஆனால், இந்தக் காலத்தில் நடுத்தர மக்களுக்கு சிபில் ஸ்கோர் என்பது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு, பைக், வீட்டு உபயோகப் பொருட்களை ஒட்டுமொத்தத் தொகையையும் கொடுத்து வாங்க முடியாது. எனவே, இஎம்ஐ எனப்படும் தவணை முறையை நம்பியே அவர்களின் மொத்த வாழ்க்கையையும் நகர்கிறது.

சிபில் ஸ்கோர்
Credit Information Bureau (India) Limited (CIBIL) என்பது கடன் வாங்குவார் குறித்த தகவல்களை வழங்கும் நிறுவனமாகும். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடன் பெற்றவர்களின் விபரங்களை ஒவ்வொரு மாதமோ அல்லது 60 நாட்களுக்கு ஒருமுறையோ அப்டேட் செய்யும். கடன் பெறுபவர்களின் தகவல்களை வழங்குவதற்கு, இன்னும் பல நிறுவனங்கள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கை அடிப்படையாகக் கொண்டே லோன்களை வழங்கி வருகின்றன.
குட் ஸ்கோர் எது?
பொதுவாக சிபில் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண்களைக் கொண்டதாகும். பெரும்பாலும் 300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் இருக்கும். கடந்த காலங்களில் நாம் பராமரித்து வந்த நிதி பர்வர்த்தனைகளைக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் சிபில் ஸ்கோர் மாறுபடும். 650க்கு மேலாக இருப்பது நல்ல சிபில் ஸ்கோராகும். அல்லது அதற்கு மேல் இருந்தால் இன்னும் சூப்பர். அவர்களுக்கு எல்லாம் லோன் எளிதில் கிடைக்கும். 750க்கு குறைவாக சிபில் இருப்பவர்களுக்கு லோன் கிடைப்பது கொஞ்சம் சவாலானது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், வீடு, வாகனக் கடன் பெற்றவர்கள், தனிநபர் கடன் வாங்கியவர்கள் , நகைக்கடன் பெற்றவர்கள் மற்றும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களின் ஒவ்வொருவர் பற்றிய அனைத்து தகவல்களும் சிபில் நிறுவனத்திடம் இருக்கும்.

தீர்மானிக்கப்படும்
கிரெடிட் கார்டு மற்றும் கடன் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் போது, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோரை பரிசோதிக்கும். சிபில் ஸ்கோரின் அடிப்படையிலேயே அந்த நபர் கடன் பெறவோ, கிரெடிட் கார்டு வாங்கவோ தகுதியானவரா? என்று தீர்மானிக்கப்படும்.
அதுமட்டுமில்லாமல், அந்த நபர் எவ்வளவு தொகை கடன் பெற தகுதியானவர், எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் அந்தக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசம் போன்றவையும் சிபில் ஸ்கோரின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது.
சிபில் ஸ்கோர் குறித்த விழிப்புணர்வு தற்போது தான் பொதுமக்களிடையே ஏற்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறு சிறு தொழில் நிறுவனங்களிடம் பொதுமக்கள் கடன் வாங்கும் போது, சிபில் ஸ்கோர் பற்றிய தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?
கடனே வாங்காதவர்கள் என்றால், கிரெடிட் கார்டு மற்றும் சிறு கடனை பெற்று, அதனை தவறாத தவணை முறையில் சரியாக செலுத்தி வந்தால் சிபில் ஸ்கோர் உயரும். அதேபோல, முந்தைய கடன்களில் ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தால், அதனை முறையாக செலுத்தினால் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். இதற்கு நகைக்கடன் என்பது சிறந்த தேர்வாகும். அடமானக் கடன் மற்றும் அடமானம் இல்லாக் கடனை பெற்று, அதனை முறையாக திருப்பி செலுத்தும்பட்சத்தில் நல்ல சிபில் ஸ்கோர் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், நாம் எதிர்பார்க்கும் லோன் கிடைப்பது கடினம். குறைந்த அளவிலான தொகையே கடனாக வழங்கப்படும்.
ஜாமீன் கூட எமன் தான்
கிரெடிட் கார்டு அல்லது மற்ற கடன்களை தவணை தேதியில் செலுத்தாமல் தவறினாலோ, கிரெடிட் கார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிரெடிட் லிமிட்டில் 50 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தினாலோ சிபில் ஸ்கோர் குறையும். அதேபோல, வங்கிகளில் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது, அடுத்தடுத்த வங்கிகளில் விண்ணப்பிக்கும் போது சிபில் ஸ்கோர் சரியும். அதுமட்டுமில்லாமல், நாம் கடன் வாங்காமல், நண்பரோ, உறவினரோ கடன் வாங்கும் போது, அவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து நாம் போட்டிருந்தால், அவர்கள் தவணை தொகையை சரியான தேதியில் செலுத்தத் தவறினால், நமது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே இந்தத் தவறுகளை எக்காரணம் கொண்டும் நாம் செய்யக் கூடாது.
2 முறைக்கு மேல் வேண்டாம்
கிரெடிட் கார்டு அல்லது கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனத்தால் உங்களின் விபரங்களை சிபில் மூலம் சரிபார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்த்தால், உங்கள் சிபிலில் அது எதிர்மறையாக காட்டும். எனவே, ஒரு ஆண்டுக்கு 2 முறைக்கு மேல் கடனுக்காக விண்ணப்பிப்பதை தவிர்ப்பது நல்லது. இப்படி ஒவ்வொரு முறையும் உங்கள் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், வங்கிகள் கடன் கொடுக்கத் தயக்கம் காட்டும். மீறி கடன் கொடுத்தாலும், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

அவ்வப்போது தங்களின் சிபில் ஸ்கோரை செக் பண்ணுவது நல்ல பழக்கம் தான். அப்போது, தான் நமது சிபில் ஸ்கோரில் ஏதேனும் தவறுகள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் முறையிட்டு நாம் அதனை சரி செய்ய முடியும். உதாரணமாக பிறர் வாங்கி கடன்களை நமது சிபிலில் பதிவு வைத்து விடுவார்கள். இதனால், நமது சிபில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
சரி செய்வது எப்படி?
நாம் வாங்காத கடன் குறித்த பதிவு நமது சிபிலில் பதிவாகியிருந்தால், www.cibil.com என்ற வலைதளத்திற்கு சென்று பான் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவிட வேண்டும். அப்போது, நீங்கள் பெற்றுள்ள கடன் விபரங்கள் பட்டியலிடப்படும். அதில், நீங்கள் பெறாத கடன் குறித்த விபரம் இடம்பெற்றிருந்தால், உங்கள் ஆட்சேபணையை அங்கு பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தக் கடனை தான் வாங்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டு. மேலும், அந்தக் கடனை பதிவு செய்து வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வ புகாரை அளிக்க வேண்டும்.
பொதுவாக 30 நாட்களுக்குள் இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. காரணம், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனத்திடம் இருந்து விளக்கம் பெற வேண்டியிருப்பதால், சில மாதங்கள் கூட ஆகலாம். மேலும், தவறான பதிவுகளை நீக்கத் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும். எனவே, வங்கி இல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து அவர்கள் சொல்லும் வழிமுறைகளை கடைபிடித்தால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.




