கோவை: விஜய் ஒரு புதிய பயணத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது அவருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று விக்ரம்பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகை சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரது நடிப்பில் சிட்டி ஆப் கோல்டு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கோவையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை கோவையைச் சேர்ந்த அறிமுக இயக்குனர் சித்தார்த் இயக்க, பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் பட குழுவினரான விக்ரம் பிரபு, சிவாத்மிகா ராஜசேகர், இயக்குனர் சித்தார்த் ஆகியோர் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் விக்ரம் பிரபு, கோவையை மையமாக வைத்து உருவாகி வரும் சிட்டி ஆப் கோல்டு திரைப்படம் கடந்த 52 நாட்களாக கோவையில் படமாக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் இரண்டு நாட்கள் படபிடிப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும் கோவையில் ஏற்கனவே பல்வேறு படப்பிடிப்புகளில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்திருப்பது நல்ல ஒரு அனுபவமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் ஒவ்வொரு படத்திலும் நல்ல கதையம்சம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தான் நடித்த வருவதாகவும் இந்த படத்தின் குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இப்படம் முழுக்க கமர்சியல் படமாகவும் பொழுதுபோக்கு படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவரிடம் முதலமைச்சர் விஜயின் ஆட்சி குறித்த செய்தியாளர்கள் கேள்வியெழுப்பவே அரசியல் குறித்த கேள்வி வேண்டாமே என தவிர்த்ததுடன், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும் அவர் தற்போது ஒரு புதிய பயணத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக உள்ள நடத்திக் கொண்டிருப்பதாகவும் அதே வேளையில் அவர் ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதை தொடர்ந்து பேசிய இயக்குனர் சித்தார்த், கோவை தங்க நகை தொழிலுக்கு மிக முக்கியமான நகரம் என்பதால் தங்கத்தையும் தங்க நகை உற்பத்தியையும் கோவையையும் சம்பந்தப்படுத்தி இந்த படத்தை இயக்கி வருவதாகவும் அதனுடன் சேர்த்து ஒரு கமர்சியலான கதையை உருவாக்கி இருப்பதாகவும் கூறினார்.
மேலும் 52 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்துள்ள சூழலில் படப்பிடிப்பிற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் அதிகாரிகள் மிகச் சிறந்த ஒத்துழைப்பு அளித்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.





