கோவை: கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவையின் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் ஒன்றான மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆறு நாட்களாக தினமும் கோ பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
மேலும், விழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம்!
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று (நவம்பர் 15) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், குதிரை வாகனத்தில் வீரபாகுவும் எழுந்தருளினர். தொடர்ந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, மாலை 3.30 மணியளவில் சூரனை வதம் செய்வதற்காக சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டார். அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் ‘அரோகரா… அரோகரா…’ என பக்தி முழக்கங்களை எழுப்பினர்.
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை கோவிலில் குவிந்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம்!
சூரசம்ஹார நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் நிகழ்வாக இன்று (நவம்பர் 16) வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதற்காக கோவில் மூலஸ்தான மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது வள்ளி தேவி வெண்பட்டும், தெய்வானை பச்சைப் பட்டும் அணிந்து மணக்கோலத்தில் காட்சியளித்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்.
திருக்கல்யாண உற்சவத்தின் ஒரு பகுதியாக உரல் இடித்து பொற்சுண்ணம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
வீடியோ
ரூ.2.43 லட்சம் காணிக்கை!
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மொத்தம் ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 900 காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கல்யாண உற்சவத்தையும், சுவாமி திருவீதி உலாவையும் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு!
இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, கோவை மாநகர காவல் ஆணையர் திவ்ய பாரதி, தெற்கு துணை ஆணையர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விமலா, கோவில் தக்கார் ஜெயக்குமார், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பிரேம்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செய்திருந்தனர்.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரம் மற்றும் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவத்துடன் கோலாகலமாக நிறைவடைந்தது.
கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது. சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் சார்பில் ரூ.2,43,900 காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.
Lord Murugan’s Thirukalyanam ceremony with Valli and Deivanai at Marudhamalai Subramaniya Swamy Temple in Coimbatore, marking the conclusion of the 2026 Kanda Sashti festival.





